இலங்கை பொருளாதார மீட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அதேவேளை, நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுச் சூழல் இன்னமும் பெரும் சவால்கள் நிறைந்ததாகவே காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் 2026 முதலீட்டுச் சூழல் பற்றிய அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட 5 சதவீத பொருளாதார வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.
இருப்பினும், 2025 இல் இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீடு 1.06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமேயாகும்.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 சதவீதமாகும்.
வளர்ந்து வரும் ஏனைய பொருளாதார நாடுகளில் இத்தொகை 3 முதல் 4 சதவீதம் வரை காணப்படும் நிலையில், இலங்கையின் முதலீட்டுப் பெறுமதி மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட நிதியமைவுத் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் அளித்துள்ள அர்ப்பணிப்பு முதலீட்டாளர்களுக்குச் சற்று நம்பிக்கையளித்துள்ளது.
இருப்பினும், சந்தைத் திறப்பு தொடர்பான தெளிவற்ற கருத்துக்கள், சீரற்ற கொள்கைகள் மற்றும் திடீரெனத் திட்டங்கள் கைவிடப்படுதல் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டுகின்றனர்.
அத்துடன் இலங்கை முதலீட்டுச் சபை முதலீட்டாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கத் தவறியுள்ளமையும் இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்களின் திறனின்மையும் முதலீடுகளைப் பாதிக்கும் பிரதான காரணிகளாக உள்ளன.
மேலும் வெளிநாட்டுப் பங்குரிமை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள நிறுவனங்களுக்கு காணிகளை விற்பனை செய்வதில் உள்ள சட்டத் தடைகள் மற்றும் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் முதலீட்டாளர்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.
2022 நெருக்கடிக்குப் பின் திறமையான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்ததால் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, குறிப்பாக ஆடைத் துறையில் ஊழியர்கள் விலகும் வீதம் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அண்மைக்காலத்தில் இலங்கையில் சர்வதேச முதலீட்டுத் திட்டங்கள் தாமதமடைந்துள்ளமையை அமெரிக்க அறிக்கை சான்றுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் செலவிலான சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் சீன நிறுவனத்துடனான கருத்து வேறுபாடுகளால் 2026 ஜூன் வரையிலும் நிலுவையில் உள்ளது.
அதேபோல், அரசாங்கம் ஒப்பந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய முயன்றதால் வடக்கில் 400 மில்லியன் டொலர் செலவிலான காற்றாலை மின் திட்டத்திலிருந்து இந்திய அதானி நிறுவனம் 2025 பெப்ரவரியில் விலகியது.
மேலும், சைனா ஹாபர் நிறுவனத்துடனான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு திட்ட ஒப்பந்தமும் கையெழுத்தாகச் சில நாட்களே இருந்த நிலையில் நிறுத்தப்பட்டது.
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், வர்த்தக வசதிகளை மேம்படுத்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை மறுசீரமைப்புகளை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.



