ஈரானிய எண்ணெய்க் கப்பல்களுக்கு உதவ வேண்டாம் : தனியார் நிறுவனங்களுக்கு வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை

இலங்கையின் கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பல்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், அவ்வாறு வழங்கும் தனியார் நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகளுக்குப் பலியாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, கடந்த சில மாதங்களாக இலங்கைக் கடற்பரப்பிற்கு வெளியே 15 ஈரானியக் கப்பல்கள் உட்பட 47 வெளிநாட்டுக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.

இக்கப்பல்கள் இலங்கையின் பிராந்தியக் கடற்பரப்பிற்கு வெளியே உள்ளதால், அவற்றுக்கு உணவு, நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டிய எவ்வித சட்டப்பூர்வப் பொறுப்பும் அரசாங்கத்திற்கு இல்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தபோதிலும், அரசாங்கம் எந்தப் பொருட்களையும் வழங்கவில்லை என்றும், இனிமேலும் வழங்காது என்றும் அமைச்சர் உறுதிபடக் கூறினார்.

அமெரிக்காவின் அழுத்தங்கள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக எவ்வித கோரிக்கையையும் விடுக்கவில்லை என்றும், இவ்வாறான வழங்கல்களைப் வழக்கமாகத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார.

இருப்பினும், அமெரிக்காவினால் தடைசெய்யப்பட்ட இக்கப்பல்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தனியார் நிறுவனங்கள், அமெரிக்க வர்த்தக உறவுகளை இழப்பதுடன் அமெரிக்க வங்கி அமைப்பிலிருந்தும் நீக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.

இதனால் தனியார் நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடல்சார் பொருளாதாரத் தடைகளை மீறுவதைக் கண்டறிதல் மற்றும் அணுசக்தி கடத்தலைத் தடுத்தல் தொடர்பில் அமெரிக்க நிபுணர்களால் இலங்கை அதிகாரிகளுக்கும் கடற்படை வீரர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகளும் தொழிற்பாடுகளும் அண்மையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.