அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு’ எதிராக அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் பரந்துபட்ட மக்கள் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சர்வஜன நீதி அமைப்பின் பிரதிநிதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு அமைவாக, நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே இந்த புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இதில் ‘பயங்கரவாதம்’ என்ற பதத்திற்குப் மிகப்பரந்த வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாருக்கு உள்ள கைது செய்தல் மற்றும் தேடுதல் அதிகாரங்கள் ஆயுதப் படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய சட்டமூலத்திற்கு அரசியல் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுவொரு ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றும், மக்களின் அடக்குமுறைக்கான ஆரம்பப் புள்ளியாகவே இது அமையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்களாணையைப் பெற்ற தற்போதைய அரசாங்கம், மனித உரிமைகள் நியமங்களுக்கு மதிப்பளிக்கத் தவறுவது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்துக் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான வகையில் தற்போது செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
முன்னைய காலங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராகத் தாம் முன்னெடுத்த விழிப்புணர்வுப் பிரசாரங்களில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் பங்கேற்றமையைச் சுட்டிக்காட்டிய அவர், இப்புதிய சட்டமூலத்தினால் வரக்கூடிய ஆபத்துக்களை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் சர்வஜன நீதி அமைப்பின் ஊடாக அடுத்த வாரம் முதல் தீவிரப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் என எம்.ஏ. சுமந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


