தமிழகத்தின் மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் குறித்து விசேட கவனம்!

தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்ட மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்டதாக எழுந்த முறைப்பாடு தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களை சந்தித்த அவர் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டுக்குச் சென்ற சிலர், மீண்டும் இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து மனுக்களையும் வழங்கியுள்ளனர்.

ஆதார் அட்டை இல்லாததால் மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதிலும், அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதிலும் சிரமம் ஏற்படுவதாக முகாமிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை பெறப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முகாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் நலத்திட்டப் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்துள்ளதாக தமிழக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.