ஞானசார தேரரை கைது செய்யுமாறு மீண்டும் பிடியாணை!

கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30) மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (29) மேன்முறையீட்டு நீதிமன்றம் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்ததுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டது.

மேலும், இந்த பிடியாணையை காவல்துறை மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், ஞானசார தேரரை நாளைய தினம் (1) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.

இந்தநிலையில் ஞானசார தேரரை கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.