சஹ்ரான் ஹாஷிம் குழுவுக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ள விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இது குறித்து அவரிடமுள்ள மேலதிக தகவல்களை அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“சஹ்ரான் குழுவின் புதிய தலைவர் நியமனம் சம்பிக்க ரணவக்கவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொடர்பில், காவல்துறை குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்கும்.
ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி என்ற ரீதியில், அவரிடம் இது தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது சான்றுகள் ஏதேனும் இருப்பின், அவற்றை உரிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பதே பொருத்தமான செயலாகும்.
மாறாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் இவ்வாறான தகவல்களை வெளியிடுவது பொறுத்தமற்றது.
உரிய தரப்பினரிடம் தகவல்கள் வழங்கப்பட்டால் தேவையான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கும் இலகுவாக இருக்கும்” என்று அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



