விடுதலைப் போராட்டத்தினுடைய தியாகங்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

விடுதலைப் போராட்டத்தினுடைய தியாகங்களை கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய சில தலைவர்கள் மிக மோசமாக இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 18ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சம்பந்தன் தெரிவித்த கருத்து ஒன்று ஊடகங்கள், புலம்பெயர் மக்கள், சமூக வலைத்தளங்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளது போராட்டம் அழிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாகும் என்று அவர் தெரிவித்த கருத்தானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டம் அழிக்கப்பட்டது நல்ல விடயம் என்று தெரிவிக்கும் சம்பந்தனும் இதில் உடந்தையாக இருந்தாரா, இருக்கிறாரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளது போராட்டம் அல்லது இளைஞர், யுவதிகளின் தியாகங்கள் பற்றி தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர்களை புகழ் பாடுவதும், கூட்டமைப்பில் இருக்கக் கூடிய சம்பந்தன் போன்ற சிலர் அந்த போராட்டத்திற்கும், அந்த தியாகத்திற்கும் எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவிப்பதும் என்பது ஒரு புதிய விடயமல்ல.

இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு கடந்த 18 வருட காலத்தில் நீண்டகாலம் நான் இந்த கூட்டமைப்புக்குள் இருந்தவன் என்ற வகையில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகள், பொதுமக்களது தியாகங்களை காலத்திற்கு காலம் தேர்தல் காலத்தில் பயன்படுத்துவதும், தேர்தல் முடிந்த பிற்பாடு தியாகங்களை காலிற்குள் போட்டு மிதிக்கின்ற சம்பவங்களும் இடம்பெற்றதை அவதானித்துள்ளேன். இது புதிய விடயமல்ல.

நாடாளுமன்றத்துக்குள் சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆற்றிய உரைகள், “பயங்கரமான, கெடூரமானவர்கள். அவர்களை யாரும் அழிக்கவில்லை. அவர்களிடம் ஜனநாயகம் இல்லை.

அவர்கள் தங்களால் தாங்கள் தான் அழிந்தார்கள் என்று சொல்லியும், தன்னுடைய நண்பர்கள் லக்ஸ்மன் கதிக்காமர் உட்பட பலரை படுகொலை செய்துள்ளார்கள். ஆகவே, அவர்கள் கொடூரமான இயக்கம்” என்றும் தெரிவித்திருந்தார். இது நாடாளுமன்ற கன்சட்டிலும் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஆயுதப்போராட்டம் உச்சக்கட்டம் அடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறுபட்ட இராஜதந்திரிகளின் சந்திப்பிலும் கூட இந்தப் போராட்டத்தைப் பற்றியும், போராளிகளைப் பற்றியும் மிக மோசமான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

இந்த விடயங்கள் எமக்கு தெரியும். இவர்களுடன் இராஜதந்திர சந்திப்புக்களில் சென்றிருக்கின்ற சில தலைவர்கள் சந்திப்பு முடிந்த பிற்பாடு இவர் அவ்வாறு கடுமையான கருத்தை தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலாக நாங்கள் அந்தப் போராட்டத்தையும், தியாகத்தையும் நியாயப்படுத்தி சொன்னோம் என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.