நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலை பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவமானது இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அளித்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழ் கனேடிய செயற்பாட்டாளர் ரோய் சமாதானம், நல்லூரிலிருந்து அகற்றப்பட்ட திலீபனின் சிலை மீளக்கையளிக்கப்படுவதுடன், அதனை அகற்றிய பொலிஸார் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட நியாயப்படுத்தலானது வழமையான சட்ட நெறிமுறைகளை மீறும் வகையிலேயே அமைந்திருக்கிறது. தற்கால நீதித்துறையைப் பொறுத்தமட்டில் சொத்து மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளே போதிய நிலையான சான்றுகளாகக் கருதப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் ஒரு நினைவுச்சின்னத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வது வழமையான சட்டபூர்வ நடைமுறை அல்ல. மாறாக அது தொடர்புடைய சமூகங்களை அச்சமூட்டுவதற்கும், அவர்களது வரலாற்றை அழிப்பதற்குமான திட்டமிட்ட அரசியல் தூண்டுதல் நடவடிக்கையாகும். இச்சம்பவம் முறையான நீதிமன்ற மேற்பார்வையற்றதும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதுமான ஒரு செயன்முறையைப் பிரதிபலிக்கிறது.
இச்சம்பவத்துக்கான அரச அனுசரணையுடனான தூண்டுதலானது இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அளித்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருக்கிறது. அவ்வாக்குறுதிகளை அடுத்து வட மாகாணத் தமிழர்கள் மத்தியில் அநுரகுமார திசாநாயக்க கணிசமான வாக்குகளைப் பெற்றார். ஆனால் இப்போது பாதுகாப்புத்தரப்பினர் திலீபனின் நினைவுச்சின்னத்தை அகற்றுவதற்கு இடமளிப்பது மக்கள் கொண்டிருக்கும் அந்த நம்பிக்கையைத் தகர்க்கிறது. அதுமாத்திரமன்றி கட்டமைப்பு ரீதியான அடக்குமுறைகள் தொடர்வதையும் இது காண்பிக்கிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் நல்லூரிலிருந்து அகற்றப்பட்ட திலீபனின் சிலை மீளக்கையளிக்கப்படுவதுடன், அதனை அகற்றிய பொலிஸார் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதேபோன்று இவ்வாறான பிளவுகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்குக் கொண்டிருக்கும் உரிமை சட்டரீதியாக உறுதிப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



