1990களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் குறித்த வழக்கு மீண்டும் நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (22) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தமது சான்றுகளை சமர்ப்பித்ததுடன், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் கோரினர்.
இதேநேரம் கடந்த ஜூலை 28ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடம் தொடர்பான சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து திரட்டி சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இருந்தும் மீண்டும் காவல்துறையினர் இன்றைய தினமும் கால அவகாசம் கோரியிருந்தனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு மீண்டும் திகதியிடப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின்போது வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்னபெலினா, காணாமல்போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
முன்பதாக, மண்டைதீவு சம்பவத்தில் தனது மகனை இழந்ததாகக் கூறப்படும் 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் கடந்த வருடம் செப்டெம்பர் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு 2025 செப்டெம்பர் 17ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முதன்முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்காக பொலிஸார் தொடர்ந்தும் கால அவகாசம் கோரிவரும் நிலையில், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாமல் உள்ள மண்டைதீவு புதைகுழி விவகாரத்தின் விசாரணைகள் மேலும் தாமதமடைவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



