முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து ஏற்கனவே விடுவிக்கத் தீர்மானித்த 17ஆயிரத்து 469 தேசம் 58 ஹெக்டேயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து காணிகளுக்குரிய மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை யுத்தகாலத்தில் மக்களுக்கு காணி ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடிய சூழல் இருக்கவில்லை என இதன்போது சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், அவ்வாறு ஏற்கனவே விடுவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது மக்களிடமிருந்து ஆவணங்களைக் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைளங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கமுடியுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆயிரத்து 231தசம் 37 ஹெக்டேயர் காணிகளை விடுவிப்பதற்கு, மக்கள் காணி ஆவணங்களை கையளிக்கவேண்டுமென பிரதேசசெயலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களிடம் ஆவணங்களைக் கோருவது பிழையான விடயமாகும். ஏன் எனில் கடந்த யுத்த காலப்பகுதியில் மக்கள் ஆவணங்கள் எவற்றையும் எடுத்துச் செல்லவில்லை. ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடிய சூழல் இருக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பில் நான் தொடர்ச்சியாக பேசிவருகின்றேன். பாராளுமன்றிலும் இதுதொடர்பில் பேசியிருக்கின்றேன். அத்தோடு மாந்தை கிழக்கில் வனவளத் திணைக்களத்தினாலும், வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 231தசம் 37ஹெக்டேயர் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக உரிய பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களால் நேரடியாக கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே விடுவிக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது ஆவணங்களை காண்பிக்குமாறு கோருவது எவ்வகையில் நியாயம்? யுத்தகாலத்தில் கோவணத்துடன் சென்ற மக்களிடம் காணி ஆவணங்களை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 17 ஆயிரத்து469 தசம்58 ஹெக்டேயர் காணிகள் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து, மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்கனவே விடுவிக்கப்படவேண்டுமெனத் தீர்மானக்கப்பட்ட காணிகளுக்கு ஆவணங்களைக் கோருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே உடனடியாக மக்களுக்கு அந்தக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்



