ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் : அரசாங்கம் அறிவிப்பு

இந்த ஆண்டு நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்க மாட்டார் என்றும், இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (08) தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த விஜித ஹேரத், ஐ.நா. பொதுச் சபையில் இலங்கையின் சார்பில் தாம் பிரதிநிதித்துவம் வழங்குவதாகவும், செப்டெம்பர் 28 அன்று நாட்டின் சார்பில் உரையாற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, செப்டெம்பர் 26ஆம் திகதி தாம் நியூயோர்க் புறப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முடிவின்படி, இந்த ஆண்டு பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேரடியாகக் கலந்துகொள்ள மாட்டார் என்றும், இலங்கையின் தூதுக்குழு அமைச்சர் மட்டத்தில் வழிநடத்தப்படும் என்றும் அவர்‌ அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தை ஜனாதிபதி புறக்கணித்தமைக்கான காரணத்தை வெளியுறவு அமைச்சர் வெளிப்படுத்தவில்லை.