உலக அரசியலில் நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கும் தந்திரோபாய முயற்சிகளைச் செய்கின்ற மாதமாக 2026 செப் டெம்பர் மாதம் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின் அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டில் ஆதரவு இழப்புக்களை நவம்பர் மாத உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் தெரிவுகளில் உணர்கின்ற அதே நேரத்தில் அமெரிக்காவின் முன்னைய கூட்டாண்மைகளில் பங்காண்மைகளில் இருந்து விலகி “டீல்” உரு வாக்கும் தந்திரோபாயத்தை மையப்படுத்தி ஈரான் மத்திய கிழக்கு, சீனா வடகொரியா தென் அமெரிக்கா உடன் முன்னெடுத்தார். கூடவே பொருளாதாரத் தடை உயர் வரி விதிப்புப் பேர அரசியலையும் படைபலத்தால் இனங் காணக்கூடிய அச்சத்தை விளைவிக்கிறது, இனஅழிப்பு பாணியானது என அரசியல் ஆய்வாளர்கள் விமரிசிக்கும் அளவுக்கு ஈரானில் இஸ்ரேலுடன் இணைந்து நடாத்தும் போரினையும் முன்னெடுத்தார். ஆயினும் டீலிலும் சரி போரிலும் சரி வெற்றி பெற இயலாத நிலையிலேயே உள்ளார். ஆயினும் வெனிசுலாவுடன் 67 பில்லியன் பரல்கள் எண்ணெய்க்கான டீலை மேற்கொண்டுள்ளதாக அறிவித்து மகிழும் மாதமாகச் செப்டெம்பர் அவருக்குப் பிறந்துள்ளது. ஜேர்மனியில் ஏ. எவ். டீ அதிதீவிர வலதுசாரி ஆட்சி மாநிலமளவில் அமைந்துள்ளது. போக்லாந்தை ஆர்ஜன்டீனா தனது என பிரித்தானியாவின் போக்லாந்து மேலான இறைமைக்குச் சவால் விடுப்பது என்பன ட்ரம்பின் அமெரிக்காவை பெரிய அமெரிக்காவாக மீளமைத்தல் என்கிற அரசியல் கோட்பாட்டின் பரவலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின இந்த “டீல்” உருவாக்கும் அரசியல் தந்திரேபாயத்தை உலகின் சிறுதேச இனங்களுள் ஒன்றான 22.05. 1972 முதல் அரசற்ற தேச இனமாகவுள்ள ஈழத்தமிழினம் அரசுடன் அரசு என்ற நிலையில் நடைமுறைப்படுத்த இயலாதிருந்தாலும், அமெரிக்காவின் டீல் என்பது உலகின் எந்த நாட்டினதும் மூலவளத்தை மூலதனத்தை மனிதவலுவை தன்னோடு இணைப்பதற்கான தந்திரேபாயம் என்பதை உணர்ந்து ஈழத்தமிழர்களின் தாயக மற்றும் அவர்கள் புலம் பதிந்து வாழும் நாடுகளின் அவர்களது மூலவளம், சமுக மூலதனம் என்பவற்றை வர்த்தக இலாபம் ஈட்டும் மூலதனமாக முதலிடக்கூடிய நிதி வளம் ஈழத்தமிழருக்கு உண்டென்ற நிலையில், இன்றைய உலகச் சந்தைக்குப் பங்களிக்கக் கூடிய ஈழத்தமிழரின் இவைகள் குறித்த அறிவார்ந்த ஆவணங்களை உருவாக்குவதன் மூலம் தனிமனித நிலையிலும் கூட்டாண்மை பங்காண்மை நிலையிலும் உலகின் கோப்ரெட் வர்த்தகத்தில் பங்கேற்பதற்கான வழிகளை உருவாக்கி தங்களதும் தங்கள் தாயகத்தினதும் ஆற்றல்களையும் உற்பத்தித்திறனையும் பொருள்வளத்தையும் அறிவியல் தொழில்நுட்ப நவீனப்படுத்தல் பயிற்சிகளையும் வளர்ப்பதனால் தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அறியாமை மற்றும் வறுமை நீக்கத்திற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளல் என்பதனை ஈழத்தமிழர்கள் தங்கள் தந்திரோபாயமாகக் கொள்ள வேண்டும். இதன் வழியாகவே அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்சார் இணைப்புக்கள் உலக சந்தைப்படுத்தல் இணைப்புக்கள் தாயக மக்களுக்கு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க முடியும். இதுவே உலக மக்களுக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பாடல்களை உறவாடல்களை உருவாக்கும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
மேலும் உக்ரேனில் செலன்ஸ்கி தேர்தல் நடத்தாத தந்திரோபாயத்தை தொடர்ந்த வண்ணம் தன்னுடைய தலைமையிலே ஐரோப்பிய ஒன்றியத்தினது குறிப்பாக பிரான்சினது துணையுடனும் பிரித்தானியாவினுடைய நீண்டதூர தாக்குமாற்றல் உடைய ஏவுகணைகள் இணைப்புடனும் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஸ்யாவுக்கு உள்ளேயே பொருளாதார இலக்குகளை நோக்கி வான்வெளித் தாக்குதல்களை தொடர்கிறார். ரஸ்யா தனது நாட்டின் மீதான உக்ரேனின் தாக்குதலுக்குப் பதிலடி என்ற நியாயப்படுத்தலுடன் உக்ரேனிய மக்களையும் உட்கட்டுமானங்களையும் வான்வெளித் தாக்குதல்களால் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த யுத்தத்தின் விளைவாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கள் பாதுகாப்புக்குறித்த இராணுவ பலத்தை வான் கடல் வழி கட்டமைப்பதற்கான அக்கறைகளுடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 5 வீதம் வரை பாதுகாப்புக்காகச் செலவிடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 வீதத்தைப் பாதுகாப்புக்கு ஒதுக்க பிரித்தானியாவின் புதிய பிரதமரும் பச்சைக்கொடி காட்டியுள்ளதுடன் ரஸ்யா, பிரான்சும் பிரித்தானியாவும் நெருப்புடன் விளையாடுவதாகக் கூறியமைக்கு அஞ்சாத நிலையில் பிரித்தானியாவின் உக்ரேனுக்கான ஆயுதபல வழங்கலை உறுதிப்படுத்தியுமுள்ளார். இது ஐரோப்பிய மீள் நட்பாடல் வழியாக பிரித்தானியா தன்னையும் நிலைப்படுத்தி தன் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் தந்திரோபாயமாக உள்ளது. பிரான்சிய அரசத்தலைவர் மக்ரோனின் பிரித்தானிய வருகை இந்த பிரித்தானிய தந்திரோபாயத்தை மேலும் பலப்படுத்தும் செயலாக மாறியுள்ளது. உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் மீள் அங்கத்துவம் பெறாது விட்டாலும் சுங்கவரி ஒன்றிப்பிலும் ஒற்றைச் சந்தை முறைமையிலும் மீளிணைவுக்கான தந்திரோபாயமாக உள்ளது. இதனை வலியுறுத்தக் கூடிய முறையில் பிரித்தானியப் பிரதமர் அன்டி பேர்ணம் அவர்கள் தான் பிரதமராக வந்து ஆறு வாரத்தின் பின்னர் பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்ரர் பாராளமன்றத்தில் பிரதமர் என்ற பதவிவழி அதிகாரத்துடன் ஆற்றிய முதலாவது உரையில் மார்கெரெட் தச்சரின் தச்சரிசத்தின் தனியுடமையாக்கலும் பொரிஸ்யோண்சனின் பிரிக்ஸிட் வழியான ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதும் பிரித்தானியாவுக்கு எத்தகைய பொருளாதார இழப்புக்களை தோற்றுவித்துள்ளது என்பதனை எடுத்து விளக்கி மீளவும் பொதுமக்கள் கட்டுப்பாட்டை தனியுடமையாக்கப்பட்டவற்றில் கொண்டு வருதலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு இணைவு மற்றும் சந்தை இணைவு பல்கலைக்கழகக்கல்வி அறிவியல் தொழில்நுட்ப இணைவுகளுக்கான தடைகளை நீக்குதல் என்பவற்றை தனது தந்திரோபாயங்களாக செயற்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நேரத்தில் பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவி கெமி பாட்நொக் அன்டி பேர்ணம் அவர்கள் 1980ம் ஆண்டிலும் 2016ம் ஆண்டிலும் வாழ்வதை விடுத்து இன்றைய காலகட்டத்திற்கு என்ன செய்யலாம் என்பதனைக் குறித்துப் பேசுமாறு கூறியமையையும் பதிவு செய்ய வேண்டும். இது ஈழத்தமிழர்களுக்கும் கடந்த காலத்தில் மட்டும் வாழாது சமகாலத்துக்கு ஏற்ற தந்திரோபாயங்களை தங்களது அமைப்புக்களில் கட்சிகளில் மக்கள் கட்டுப்பாடு பலப்படக்கூடிய வகையில் கட்டமைக்க வேண்டுமென்கின்ற அழைப்பை விடுத்துள்ளது என்பதனை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
இந்த உலக தந்திரோபாய மாற்றத்திற்கு ஏற்ப சிறிலங்காவிலும் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தந்திரோபாய முயற்சிகளைச் செய்கின்ற மாதமாகவே 2026 செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்காவின் அரசியலமைப்பின் 22வது திருத்தம், நாமல் ராஜபக்சாவை ஊழல் விசாரணைக்காக கைது செய்தல் என்பனவற்றுடன் சிறிலங்காவின் அரசியல் நகரத் தொடங்கியுள்ளது.
இதற்கான மற்றொரு முயற்சியாகவே இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனச் சட்டம் அமைகிறது. அதே வேளை ஈழத்தமிழர்களின் இறைமையை ஊடகத்துறை மூலமாகவும் ஒடுக்கும் புதிய தந்திரோபாயம் இது என்கின்ற அச்சம் தாயகத்திலும் அனைத்து உலகிலும் உள்ள ஈழத்தமிழ் ஊடகவியலாளர்களிடை தலைதூக்கியுள்ளது.
இது குறித்து வீரகேசரியில் திரு. க. சிவலிங்கமூர்த்தி அவர்கள் “பட்டய ஊடகவியலாளர் நிறுவனச் சட்டம் – வடகொரியா சீனா போன்ற நகர்வா? ஏன்ற ஆய்வுக்கட்டுரையில இச்சட்டவாக்கச் செயல் “ மனிதனின் சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாடானது பிறப்பால் அமைந்த அடிப்படை உரிமையாகும் என்ற கோட்பாட்டுக்கு மாறாக ஒரு அரசாங்கப் பேரவையின் சான்றிதழ் அல்லது பட்டயப் பதிவு மூலமாக மட்டுமே ஊடகவியலையோ அல்லது கருத்து வெளிப்பாட்டையோ முன்னெடுக்க முடியும் என்ற நிலைமையை உருவாக்குவது அரசியல் அமைப்பு உத்தரவாதம் அளிக்கும் மக்கள் இறைமையையும் மக்களுக்கான சுதந்திரத்தையும் சட்டரீதியாகக் குறுக்கும் செயலாகும்” என மிகத்தெளிவாக எடுத்து விளக்கியுள்ளமையை இங்கு மீள்நினைவுபடுத்த இலக்கு விரும்புகிறது.
அவர் தனது கட்டுரையில் “இச்சட்டமூலம் தோற்றுவிக்க முனையும் இலங்கை பட்டய ஊடக தொழில் வாண்மையாளர்கள் நிறுவனத்தின் ஆரம்பக் கட்ட நிருவாகம் உறுப்பினர் சேர்க்கைக்கான அளவுகோல்கள் தொழிற்தகுதி நெறிமுறைகள் மற்றும் தேர்தல் விதிகளைத் தீர்மானித்தலுக்கான முதன்மை அதிகாரத்தைக் கொண்ட இடைக்கால குழவை நியமிக்கும் முழுமையான ஆளுமைப் பொறுப்பு அமைச்சருக்கே அளிக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக அமைச்சின் செயலாளர், மற்றும் அமைச்சரால் நேரடியாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளை கொண்ட இந்த இடைக்காலக்குழுவின் மூலம் அரசின் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் ஊடகத்துறையின் உள்வாரி இயங்குதளத்துக்குள் நேரடியாக ஊடுருவுவதற்கான சட்டபூர்வ வாயில் அகலத்திறக்கப்படுகிறது. இது சிறிலங்காவின் அரசியலமைப்பின் 14(1) ஏ வழங்கும் ஒவ்வொரு குடியினரதும் பேச்சு எழுத்துச் சுதந்திரத்துக்கான இயற்கை உரிமை, 12(1) உத்தரவாதப்படுத்தும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் தத்துவம், 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளில் வரையறுக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட ஆட்சி அதிகாரம் மக்களிடமே உறைந்துள்ளது என்பனவற்றை வன்முறைப்படுத்துகிறது. மேலும் சட்டத்தின் 4(ஓ) 23 மற்றும் 24 “தொழில்முறைத் தவறான நடத்தை எனக்காரணம் காட்டி ஊடகப் பதிவை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இடைநிறுத்த பேரவைக்கு அதிகாரமளிப்பது என்பது அரசஅதிகாரத் தவறுகளை ஊழல்களை புலனாய்வு செய்தியாகவோ கட்டுரையாகவோ வெளியிடும் எந்த ஊடகவியலாளரும் தொழிலிழப்புக்கு ஆளாகும் பேரபாயம் உள்ளது” என்பதையும் எடுத்து விளக்கியுள்ளார்.
இந்நிலையில் தந்திரோபாயங்கள் வழியாக அரசியல் நகர்வுகள் உள்ளமையை புரிந்து கொண்டு தாயகத்தில் தமிழ் ஊடகத்துறையின் சுதந்திரத்தை பேண செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை 2026-27க்கான முதலாவது கூட்டத்தைக் கூட்டுகிற நிலையில் உலகத் தலைவர்கள் அங்கு வருகின்ற சூழ்நிலையில் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரவும், செம்மணி இனஅழிப்புக்கான நீதிக்கான உலக மக்களின் ஆதரவைப் பெறவும், வலிந்து காணாமல் ஆக்கத்தைச் செய்தவர்களுக்கான தண்டனை நீதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கிட்டிய குடும்பங்களுக்கான பரிகார நீதி ஆகியன கிடைக்கவும் தகுந்த தந்திரோபாய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது. தியாகி திலீபனின் “மக்கள் போராட்டம் எழ வேண்டும் என்னும் அழைப்பை அவரை நினைவேந்தும் இந்த செப்டெம்பர் மாதத்தில் ஈழத்தமிழ் மக்களின் சனநாயகப்போராட்டமாக முன்னெடுக்கத் தகுந்த தந்திரோபாயங்களை ஈழத்தமிழர்கள் தேசிய ஒருமைப்பாட்டுடன் முன்னெடுக்க வேண்டும் என்பது இலக்கின் பணிவான வேண்டுகோளாக அமைகிறது.
ஆசிரியர்
- ஆதிகாரப்பட்ட இன்றைய உலகில் இறைமை பேண ஈழத்தமிழர்கள் இனமாக சனநாயக போராட்டங்களில் இணைய வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 406
- Ilakku Weekly ePaper 407 | இலக்கு-இதழ்-407 | சனி, 05 செப்டெம்பர், 2026




