காவல்துறை சேவைக்கு புதிய பதவி உயர்வு முறைமை , அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் புதிய சீருடை – ஜனாதிபதி!

இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காக சரியான பதவி உயர்வு முறைமை தயாரிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் இடர் கொடுப்பனவை வழங்குவதற்கும், தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும்  ஆட்சேர்ப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

திம்பிரிகஸ்யாய களப்படை தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் நடைபெற்ற 160வது பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த 160 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு மோதல் சூழ்நிலைகள், தொற்றுநோய்கள் போன்ற பொது மக்கள் பேரழிவுகளை எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பொது மக்களுக்காகவும்,  அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் இலங்கை பொலிஸார் ஆற்றிய மகத்தான பங்களிப்பை ஜனாதிபதி இங்கு பாராட்டினார். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இலங்கை பொலிஸாருக்கு , போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் தேசிய பொறுப்பு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.  தொழில்முறை பொறுப்புக்கு அப்பாற்பட்ட சமூகப் பொறுப்பாகக் கருதி  அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு ஜனாதிபதி அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் அதிக அளவிலான போதைப்பொருள் சோதனைகள் மற்றும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டமை, வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 74 ஆயுதமேந்திய குற்றவாளிகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் நாட்டுக்குக் கொண்டு வந்தமை ஆகியவற்றைப் பாராட்டிய ஜனாதிபதி, இந்நாட்டை குற்றங்களின் இராஜ்யத்தில் இருந்து அமைதியான நாடாக மாற்றுவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகபட்சமாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

160 ஆவது பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியை, பொலிஸார் அணிவகுப்பு மரியாதையுடன் பெருமையுடன் வரவேற்றனர். மக்கள் சேவைகளை திறமையாகவும் விரைவாகவும் வழங்குவதற்கும், பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான தகவல்பரிமாற்றத்தை முறைப்படுத்துவதற்கும் “SRI LANKA POLICE MOBILE APP” செயலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நவீனமயமாக்கப்பட்ட www.police.lk இணையதளமும் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை பொலிஸின் 160 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு  முத்திரை  மற்றும் முதல் நாள் உறை என்பன ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், நீண்டகால சேவை அடிப்படையில் பிரதம பொலிஸ் பரிசோதகர் தரத்திற்கு கீழ் உள்ள 1,489 பொலிஸ் அதிகாரிகளுக்கும், பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 153 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டதோடு இதனை அடையாளப்படுத்தும் வகையில் பதவி உயர்வு கடிதங்களும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

160 ஆவது பொலிஸ் தின நிகழ்வில் பங்கேற்றமைக்காக இலங்கை பொலிஸின் கௌரவத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் வகையில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

பொலிஸின் நீண்ட வரலாற்றில், நமது நாட்டில் ஏற்பட்ட பல்வேறு யுத்த மோதல்கள்,  அதேபோன்று இயற்கைப் பேரழிவுகள், தொற்றுநோய்கள் போன்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நமது நாட்டின் பொதுமக்கள் பேரிடர்களைச் சந்தித்த ஒவ்வொரு தருணத்திலும், இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்காகவும்,  அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் மிகவும் பாரிய பொறுப்பையும், மதிப்பிற்குரிய பணியையும் ஆற்றியுள்ளனர்.

இந்த 160 ஆண்டுகள் முழுவதும் இலங்கை பொலிஸாரால் ஆற்றப்பட்ட பணி குறித்து, நமது நாட்டின் பிரஜைகளுக்கு உங்கள் மீது மதிப்பும், கௌரவமும், நம்பிக்கையும் உள்ளது.உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த கௌரவம், அன்பு மற்றும் நம்பிக்கையை பாதுகாத்து முன்னோக்கிச் செல்வது உங்கள் பொறுப்பாகும்.

பொலிஸ் துறையிடம் உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி, எழுந்துள்ள விமர்சனங்கள் அல்லது பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் இருப்பின், அவற்றை நீக்கிவிட்டு முன்னோக்கிச் செல்வதே இத்தருணத்தில் இலங்கை பொலிஸாரின் முக்கியப் பொறுப்பாகும். எத்தகைய விமர்சனங்கள், எத்தகைய குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் இருந்தாலும், இன்று மக்கள் “எங்கள் பிரதேசத்திற்கு ஒரு பொலிஸ் நிலையத்தைத் தாருங்கள்” என்றே கேட்கிறார்கள்.  அந்த மக்களின் அமைதியும் பாதுகாப்பும் உங்களிடமே உள்ளது என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

எங்காவது உள்ள ஒரு உப பொலிஸ் நிலையத்தை அகற்றத் தயாரானால் அதனை  அகற்ற வேண்டாம் என்று  மக்கள் போராடுவர். உங்கள் மீது அவர்களுக்கு உள்ள கௌரவமும் நம்பிக்கையும்தான் இதற்குக் காரணம். எத்தகைய  குறைபாடுகள் இருந்தாலும், இன்றும் நமது நாட்டின் பிரஜைகள் உங்களைக் கௌரவிக்கிறார்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் மேலும் தெரிவித்தார்.