எல் நினோவின் தாக்கம் காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2026 ஒக்டோபர் முதல் இலங்கையில் அதிக மழைக்கான அறிகுறிகள் முக்கியமாகக் காணப்படலாம், இது ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறும் இரண்டாவது இடைப்பருவப் பருவமழைக் காலத்துடன் தொடர்புபடுகின்றது.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் இலங்கையில் பொதுவாக அதிக மழை பெய்யும் காலமாகும். இதனைத் தொடர்ந்து டிசம்பர் முதல் பெப்ரவரி வரை வடகிழக்கு பருவமழை பெய்யும்.
இந்தக் காலப்பகுதியில் நாட்டின் வருடாந்த மழைவீழ்ச்சியில் கணிசமான அளவு கிடைப்பதாகவும், சில பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும். எல் நினோ நிலைமை மிகவும் வலுவாக மாறக்கூடும், அது வரலாற்றில் பதிவான வலுவான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக அமையக்கூடும்.
இந்த நிலைமை 2027ஆம் ஆண்டு வரையும் நீடிக்கக்கூடும். அதிக மழையுடன் வெள்ளம், நீர் தேக்கம் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றுள்ளது.



