முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு குறித்த விகாரையின் விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குருந்தூர் விகாரை பூமியில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அங்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்காக நிலைநிறுத்தப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விகாரைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, தொல்லியல் தலம் மற்றும் தொல்பொருட்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்கள் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், தற்போது அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அப்பகுதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள தொல்லியல் விகாரை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் அங்கு வருகை தரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, விகாரைக்கான பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக மீள பணியமர்த்துமாறு அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.



