இசட் அல்பா பரம்பரையினரின் கையிலேயே நாடுகளின் இறைமையுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 405

மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதல் என்பது இங்கிலாந்து வாழ்  இசட் பரம்பரையினரின் கோரிக்கையாகவுள்ளது. இதனை “எனது பரம்பரையினர் பிரிக்ஸ்ட் நடைபெற்றபொழுது குரலாக இருக்கவில்லை – ஆனால் பேர்ணம் இளையவர்களுக்குப் புதிய நம்பிக்கை அளித்துள் ளார் “ (My Generation had no voice on Brexit but Burnham gives the young fresh hope) என்னும் தலைப்பில் பிரிக்ஸ்ட் இடம்பெற்ற பொழுது 14 வயதில் இருந்த சியரா சேர்ஜன்ட் ( Ceira Sergeant) 17.08.2026 இல் பிரித்தானியாவின்  “த கார்டியன்” ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.
“பிரிக்ஸ்ட் இப்பொழுது இளையவர்கள் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சினைகளையும் உருவாக்க வில்லையாயினும் ஐரோப்பாவுடனான நெருக்கமான இணைவுகள் அதிக வாய்ப்புக்களை எங்களுக்குத் தந்துள்ளது” என்னும் சியரா சேர்ஜன்டின் கருத்து இசட் பரம்பரையினர் ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் சுதந்திரமாக வாழ்வதை விரும்புகின்றனர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மூத்த தலைமுறையினர் எடுக்கின்ற முடிவுகளின் விளைவுகள் அந்நேரத்தில் தேர்தல் மூலம் தங்கள் குரலை வெளியிட இயலாத நிலையில் இருக்கும் 14 முதல் 16 வயதினரை நேரடியாகத் தாக்குகின்றது என்பது சனநாயக அரசியலில் முக்கியமாக பிரச்சினையாக இருப்பதை இவரின் கட்டுரை தெளிவாக்கியுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகின்ற பொழுது இளையவர்களின் சுதந்திரவாழ்வுக்கான வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்ற என்கின்ற எண்ணம் இன்றைய இசட் மற்றும் அல்பா பரம்பரையினரைச் சேர்ந்த இளையவர்களுக்குப் பலமாக உள்ளது. இது இளையவர்கள் அரசியலில் நேரடியாக ஆர்வமுடன் பங்குபற்றுவதில் இருந்து விலகிச்செல்வதற்கான மூலகாரணங்களில் ஒன்றாகவும் திடீரென இளையவர்கள் ஒன்று சேர்ந்து எழுந்து அரசுக்களை மாற்றவும் காரணமாகவும் உள்ளது.
தாங்கள் பிறந்த கண்டத்தில் தாங்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு ஏற்படுத்தப்படும் தடைகளை பணம் படைத்தவர்கள் இலகுவாகத் தாண்டி தங்கள் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்கின்றார்கள் ஆனால் பணபலம் குறைந்த மத்திய தர வர்க்கத்தினர் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் நடமாடும் சுதந்திர மறுப்புக்கு உள்ளாகின்றனர் என்பது இன்றைய இளைய தலைமுறையினரின் எண்ணமாகவுள்ளது.
இதற்கு ஈழத்தமிழ் இளையவர்களும் விதிவிலக்கல்ல. ஈழத்தமிழர்களின் இசட் மற்றம் அல்பா பரம்பரை இளையவர்கள் உடைய குரல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஈழத்தமிழர் தாயகத்திலும் ஈழத்தமிழர் புலம்பதிந்து வாழும் நாடுகளிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களால் ஈழத்தமிழின அரசியல் எதிர்காலம் பொருளாதார முயற்சிகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதன் விளைவுகளை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டிய நிலை ஈழத்தமிழரின் இசட் மற்றும் அல்பா பரம்பரையினருக்கு உள்ளது. இது இந்த இளையவர்களுக்குத் தங்கள் சமுகத்தின் மேலான வெறுப்பாகவும் பிறசமுகங்களுள் தங்களை இணைத்துக்கொள்ளும் ஆர்வமாகவும் பரிணாமமடையும் என்பது இயல்பாகவுள்ளது.
ஈழத்தமிழர்களின் இசட் மற்றும் அல்பா பரம்பரையினருக்கு ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின பரிணாம வளர்ச்சி என்பது சிறிலங்காவின் திட்டமிட்ட ஈழத்தமிழின அழிப்பு அரசியலுடன் இணைந்த கல்விமுறையால் அறியப்படாதவொன்றாக கடந்த 17 ஆண்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் தங்கள் சமகால வரலாற்றின் உண்மைத்தன்மையைக் கூட அறிய இயலாத நிலையில் தாயகத்தில் உள்ள ஈழத்தமிழின இசட் மற்றும் அல்பா பரம்பரையினர் உள்ளனர்.
தேசங்கடந்துறை புலம்பெயர்ந்து புலம்பதிந்து வாழும் உலக ஈழத்தமிழினமாகவுள்ளவர்களும் தங்களிடை பல்குழுக்களை உருவாக்கி உலக இனமாகவுள்ள ஈழத்தமிழினத்தின் தேசிய ஒருமைப்பாட்டைக் கடந்த பதினேழு ஆண்டுகளாக சிதைத்து வருவதினால் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழராலும் தாயகத்தில் வாழும்  ஈழத்தமிழரின் இசட் மற்றும் அல்பா பரம்பரையினருக்கு அவர்களின் தேசியத்தின் (Nationality) வரலாற்றை அறியப்படுத்த இயலாத நிலை தொடர்கிறது.
புலம்பதிந்து வாழும்  மேற்குலகநாடுகளில்  அரசியல் புகலிடம் பெற்றவர்கள் தங்களின் புகலிடக் கோரிக் கைக்கான அரசியல் காரணங்களை மனிதாயத் தேவைகளைத் தங்களுடன் வாழும் மற்றைய மக்களுக்கு எடுத்துரைக்கவும் அரசியல் புகலிடம் பெற்றவர்கள் தாம் வாழும் நாடுகளின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக வளர்ச்சிகளுக்கு அளித்து வரும் பங்களிப்புக்களை விளக்கவும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமை மாதம் யூலை என்பதைக்கூட மறந்து கனடாவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வாழும் ஈழத்தமிழர்கள் அர்த்தமற்ற முறையில் சனவரி மாதத்தை தைப்பொங்கலை மையமாகவைத்து கொண்டாடத் தொடங்கி தங்களுடைய ஈழத்தமிழின வரலாற்றை புகலிட வாழ்வின் காரணத்தை புகலிட நாடுகளுக்கு அளித்துள்ள அளப்பரிய கல்வி பொருளாதார பொதுச்சேவைப் பங்களிப்புக்களை மரபுரிமை மாத முறைமை வழி வெளிப்படுத்தித் தமது ஈழத்தமிழினத்துக்கான பெரும் சமுகத்தினரின் சமத்துவத்தை மதிப்பை பெறும் சந்தர்ப்பத்தை இழந்துவருகின்றனர்.
ஈழத்தமிழர்களின் பல படைப்பாளிகள் கவிஞர்கள் கலைஞர்கள் தங்களின் தாயகத்தின் வரலாற்றை தங்களின் மக்களின் கலைத்துவ இலக்கிய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெளிக்கொண்டுவராமல் தமிழகப்பண்பாட்டுக்குள் எல்லாவற்றையும் அடக்க முயல்வதே ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை தங்களின் சொந்த மண்ணை மீட்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை உலகால் புரிந்து கொள்ளவியலாத நிலையை உருவாக்கி வருகிறது.
கற்றோர் குழாத்து சனநாயகத்தின் elite democracy மூலம் பிரித்தானியக்காலனித்துவ அரசாங்கம் தொடக்கி வைத்த கல்வி முறைகளும் அரசியல் முறைமைகளும் ஈழத்தமிழர்களுக்கு பிரித்தானிய காலனித்துவம் விலகிய பின்னரும் இன்று வரை அவர்கள் அறிவாக அணுகுமுறையாக உள்ளது. ஈழத்தமிழர்களுக்கான கல்விமுறை ஈழத்தமிழர்களுக்கான அரசியல் அணுகுமுறை அரசியல் பண்பாடு  பொருளாதார  திட்டமிடல்கள் மண்னினதும் மக்களினதும் பிரிக்கவியலாத இறைமையுணர்வுடன் தன்னாட்சியை வலுப்படுத்தத் தக்க வகையில் வளர்க்கப்படுவதற்கான பள்ளிச் சிந்தனைகள் கட்டமைக்கப்பட வேண்டிய காலமிது. அவ்வாறே இசட் அல்பா பரம்பரையினரின் விளையாட்டுக்குள் இசைகள் நடனங்கள் அனைத்துலக போக்குக்கு ஏற்ப இவை வழியாக வருமானம் வரக்கூடிய முறையில் துறைசார் வளர்ச்சிகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.
மரபு என்பது நமது பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகளுக்குக் காலத்துக்கு ஏற்ற விளக்கம் கொடுத்து ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய இளம்பூரணாரின் தெளிவான விளக்கம்.  எனவே மரபு என்ற பெயரிலும் அறம் தொன்மைப்பண்பாடு என்னும் பெயரிலும் பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தியவற்றை எல்லாம் இன்றைய இசட் அல்பா சமுகத்தின் மேல் திணிக்காது அறிவார்ந்த அணுகுமுறையில் தமிழ் இலக்கிய இலக்கணங்களும் தமிழர் நம்பிக்கைகளும்  பண்பாடும் மீள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். வாழ்க்கைத் தெரிவாக இருந்தாலும் சரி வாழ்வியல் தெரிவாக இருந்தாலும் சரி இசட் அல்பா பரம்பரையினருக்கு அவர்கள் தெரிவாக அமைய அனுமதித்து இவைகள் குறித்த அனுபவப் பகிர்வுகள் செய்யப்பட்டு நெறிப்படுத்தல் செய்யப்பட வேண்டுமே தவிர திணிப்பு வளர்ப்பு முறைக் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
இதற்கான ஆரம்பப் புள்ளியாக 2024ம் ஆண்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பாக வெளியாகிய பேராசிரியர் அலெக்ஸ் கிரீனின் நூலான  “அரசியல் சமுகமாக அரசுரிமை, அனைத்துலக சட்டம், புதிய நாடுகளின் உதயம் (Statehood as Political Community, Internationa Law and the Emergence of New States) என்ற ஆய்வின் அடிப்படையில்  ஹொங்ஹொங்கின் சீனப்பல்ககைலகழகத்தில் (Chinese University of Hong Kong)  முனைவர் பட்டத்தின் பின்னான ஆய்வுக்காக “இலங்கையில் ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவது தொடர்பான சட்ட மற்றும் அரசியல் கேள்விகளை ஆராய்வதற்கான ஆய்வாளர் ஒருவருக்கான அழைப்பு அமைந்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் மூலம் பேராசியர் அலெக்ஸ் கிரீனின்  நெறிப்படுத்தலில் அமையவுள்ள இந்த முனைவர் பட்டப்பின் ஆய்வு ஒரு தனித்துவமான தமிழீழ அரசை ஆயுதமேந்திய பிரிவினை வாதத்தின் எச்சமாக மட்டும் பார்க்காமல் அதனை அரசுரிமை சார்ந்த கேள்வியாக ஆராய்வதற்கான ஆய்வு ஆராய்ச்சிக்கு வழிவகுக்குமென்று இதற்கான கட்டுரையை வெளியிட்ட ஸ்ரீலங்கா கார்டியன் தெரிவித்திருப்பதாக கட்டுரையையும் வெளியிட்டு செய்தியை தனது 21.08. 2026 இன் தலைப்புச் செய்தியாகவுமாக்கிய “ஈழநாடு” நாளிதழ் தகவல் தந்துள்ளது.
இதற்கு உழைத்த ‘நாடுகடந்த அரசாங்கத்தினரைப்’ பாராட்டுவதுடன்  தகுந்த முனைவர் பட்ட பின் ஆய்வாளர் கிடைப்பதற்கும் இத்தகைய ஆய்வுகள் உலகெங்கும் உருவாவதற்கும் உலக ஈழத்தமிழினமாக புலம் பதிந்துவாழும் தமிழர்களும் தாயக ஈழத்தமிழர்களும் இணைந்து செயற்பட வேண்டுமென்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
மனித உரிமைகள் மனிதாயத்தைப் போற்றுதல் என்கின்ற இரு வழிகளிலேயே சமகாலத்தில் இசட் அல்பா சமுகத்தினரை பொதுநன்மை (Common Goods)  குறித்து வழிப்படுத்தினாலே அவர்கள் செயற்திட்டங்களில் இணைவர் என்பது அதிமுக்கிய விடயம் என்பதையும் இந்நேரத்தில் இலக்கு வலியுறுத்திக்கூற விரும்புகிறது.
ஆசிரியர்

Tamil News