செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் . சர்வதேச நீதி விசாரணைக்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் .சர்வதேச நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதன்மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சர்வதேச நீதிவிசாரணைகள் மேற்கொள்ளப்படுவதன்மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுஇ தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழினப் படுகொலைச் சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வுப் பணிகளின் 54ஆம் நாள் அகழ்வு நேற்று (நேற்று முன்தினம்) இடம்பெற்றது.இதன்போது புதிதாக 10 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 08மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மொத்தமாக 572 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றிலிருந்து 565 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறாக செம்மணியில் தோண்டத் தோண்ட தமிழ் மக்களுடைய மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
சிறுவர்கள், பெண்கள்,முதியவர்கள் என்ற எந்த வேறுபாடுகளுமின்றி எலும்புக்கூடுகள் வெளிப்படுகின்றன. தடையப் பொருட்களாக சிறார்களின் பால் போத்தல்கள், பாடசாலைப் பைகளும் வெளிப்படுகின்றன. பச்சிளம் குழந்தைகள், பாடசாலைச் சிறார்களும், தாய்மாரும் என்ன பாவம் செய்தார்கள்? ஆயுதங்களோடு இருந்தார்களா?
எனவே இந்த படுகொலைக்குற்றவாளிகளும், இந்தப் படுகொலைகளுக்குப் பின்னாலுள்ள அப்போதைய ஆட்சியாளர்களும் சர்வதேச நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். அதுவே பதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (நேற்று முன்தினம்) ‘நீதியின் ஓலம் – 02’ அணையாவிளக்கு தொடர் போராட்டத்தின் இறுதிநாளில் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேச நீதி விசாரணையைக் கோரியே குறித்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி மேற்கொள்ளப்பட்டது.
எனவே தயவுசெய்து தற்போதைய ஆட்சியாளர்களே எமது மக்களின் வலிகளையும்,அவலங்களையும் புரிந்துகொள்ளுங்கள். எமது தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கான சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். சர்வதேச நீதி விசாரணைக்கு ஒத்துழையுங்கள். தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென வலியுறுத்துகிறேன் என்றார்.



