பளைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : அரசாங்கம்‌ நிராகரிப்பு

கிளிநொச்சி – பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட வனப்பகுதியில் பயங்கரவாத முகாமோ அல்லது வெடிபொருள் உற்பத்தி நிலையமோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போலித் தகவல்களைப் பரப்பி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்வோர் மீது கடுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

பளைப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் விவசாயப் பண்ணை மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது என்பது கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் தெரியவந்துள்ளது.

இதில் கற்றாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மூன்று மாடிகளைக் கொண்ட இந்த ஆடைத் தொழிற்சாலையில் தையல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவரால் நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த விவசாயப் பண்ணை மற்றும் தொழிற்சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் பணியாற்றுகின்றனர்.

அதேநேரம் அரச காணியை முறையற்ற வகையில் ஆக்கிரமித்து அனுமதி பெறாமல் கட்டடங்களை நிர்மானம் செய்தமை தொடர்பில், அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனித உரிமை அமைப்பொன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜயசேகரவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் தவறான தகவல்களைப் பரப்புவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரச காணிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை இன அடிப்படையில் அணுகாமல், சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா? என்பதை அடிப்படையாகக் கொண்டே விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.