யாழ்ப்பாணம் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி, பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
காலை 9.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை, உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பலாலி பிரதான வீதியிலுள்ள குறித்த சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் பலாலி காவல்துறையினரால் கடந்த 17ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வழக்கின் கீழ் சந்தேகநபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் கணேசபிள்ளை வேந்தன், பாக்கியம், எம். குணசேகரம் மற்றும் பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் பின்னணியில் இந்த நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளது



