மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமைமீறல்களுக்காகக் குரல் கொடுத்த நிலையில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36வது ஆண்டு நினைவுதினம் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது அவருடன் காணாமலாக்கப்பட்ட அவரின் உதவியாளரான பேட்ரம் பிரான்சிஸ் நினைவுகூரப்பட்டார்.
ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அருட்தந்தையின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
1923ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர், தனது 17 வயதில் இலங்கைக்கு வந்து தான் சாகும் வரை கிழக்கு மண்ணில் வாழ்ந்து, திருகோணமலை நகரத்து மண்ணுக்கும், மட்டக்களப்பு மண்ணுக்கும் கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறைகளுக்கு அளப்பரிய சேவையாற்றிய, இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைக்காய் குரல் கொடுத்தவர் ஆவார்.
அமெரிக்காவில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற யேசு சபையில் இணைந்து அருட்தந்தை ஜோன் ஹேர்பட் மட்டகளப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தொடர்ந்த அடிகளாரின் சேவை, அந்தக் கல்லூரியை இலங்கையில் தேசிய ரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் “வெல்லப்பட முடியாத அணி” என்னும் நிலைக்கு உயர்த்தியது.
இதனை விட இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமைமீறல்களுக்காக குரல்கொடுத்த, அருட்தந்தை 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஏறாவூர் பகுதியில் காணாமல் போயிருந்தார்.
அவரை நினைவுகூரும் வகையில் இன்று ஊறணியில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.



