ஊடகவியலாளர்களுக்கு உதவி: தமிழ் ஊடக ஒன்றியத்தின் தலைவர் பாராட்டு

யுத்தக்காலத்தில் பல துன்பங்களை சந்தித்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எவரும் கைகொடுத்து உதவாததை உணர்ந்து தமிழ் ஊடகவியலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க உருவான தமிழ் ஊடக ஒன்றியத்தின் ஊடகவியலாளர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தந்த தொழில் அதிபர் ஜீவரெட்ணம் முறேஷ் அவர்களுக்கு இவ் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீகஜன் பாராட்டு தெரிவித்தார்.

பிரதேச- கிராமிய் ஊடகவியலாளர்களை மென்மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் இவர்களை பாராட்டி உதவி செய்யும் நோக்குடன்  தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தொழில் அதிபர் மற்றும் சமூக சேவையாளருமான ஜீவரெட்ணம் முறேஷ் அவர்களால் உதவி வழங்கப்பட்டு லண்டனிலிருந்து வருகை தந்து இவர்களுக்கான ஊடகத்துக்கான உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு கொழும்பில் உள்ள மிராஜ் ஹொட்டலில் ஞாயிற்றுக் கிழமை (16) நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தலைமைதாங்கிய தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எஸ்.ஸ்ரீகஜன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

தமிழ் ஊடகத் துறையைப் பொறுத்தவகையில் இது ஒரு வரலாற்று நிகழ்வு என கூறலாம். பெரும் பெறுமதியான தமிழ் ஊடகத்தினருக்கு உபகரணம் வழங்குவது இதவே முதல் தடவையாக இருக்கின்றது.

இதற்கு எமக்கு பூரண ஒத்துழைப்பு தந்த தொழில் அதிபர் சமூக சேவையாளர் ஜீவரெட்ணம் முறேஷ் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்து நிற்கின்றேன்.

இந்த தமிழ் ஊடக ஒன்றியமானது 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது தமிழ் ஊடகவியலாளர்களின் உரிமைக்காகவும் இவர்களை பாதுகாக்கும் நோக்குடன் குரல் கொடுப்பதற்கு இலங்கையிலுள்ள எல்லா தமிழ் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கி இது ஆரம்பிக்கப்பட்டது.

இது ஆரம்பிப்பதற்கு அந்தநேரம் ஒரு முக்கிய காரணமும் இருந்தது. அந்நேர யுத்தக்காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வந்தனர். அந்த நேரத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுக்க எந்த சங்கமும் எமக்கு இருக்கவில்லை.

1998 ஆம் ஆண்டு யூலை மாதம் பயங்கரவாத புலணாய்வு பிரிவினரால் வீரகேசரி அலுவலகத்தில் நான் கைது செய்யப்பட்டேன். அவ்வாறு வவுனியா நிருபராக இருந்த அமரர் மாணிக்கவாசகரும் இதே நேரத்தில் கைது செய்யப்பட்டார். நாங்கள் மூன்று மாதங்கள் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டோம். இதைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டோம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எந்தவித பெரும்பான்மையான இனம் மொழி ஊடக அமைப்புகளும் எமக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் இவர்கள் எங்களுக்கு ஒரு பயங்காரவாத முத்திரை குத்தி வைத்திருந்தார்கள்.;

நாங்கள் விடுதலையான பின்னர் எங்கள் மூத்த செய்தியாளர்கள் யாவரும் இணைந்து எமக்கென ஒரு சங்கம் உருவாக வேண்டும் என்று தீர்மானித்து கொழும்பில் இராம கிருஷ்ணன் மண்டபத்தில் முதல் அமர்வை ஏற்படுத்தினோம்.

அன்று இந்த சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருசிலர் அமர்த்துவம் அடைந்திருக்கின்றபோதும் பலர் இப்பொழுதும் இங்கு இருக்கின்றார்கள். அப்பொழுது நாங்கள் ஒரு இக்கட்டான நேரத்தில்தான் இந்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தை உருவாக்கி இருந்தோம்.

அன்று தெற்கில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். சுதந்திர ஊடகவிய இயக்கம்- ஸ்ரீ லங்கா முஸ்லீம் மீடியா கோரம்- தெற்காசிய ஊடக மையம் இவ்வாறு இந்த சங்கங்கள் இயங்கி வந்தன. அந்த யுத்தக்காலத்தில் நாங்களும் இவர்களுடன் இணைந்து தமிழ் ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்பதில் செயற்பட்டு வந்தோம்.

இந்த நேரத்தில் காணாமல்போன படுகொலை செய்யப்பட்ட எமது ஊடகவியலார்களுக்காக குரல் கொடுத்து ஆர்பாட்டத்திலும் இறங்கி இருந்தோம். நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்திலும் குரலும் கொடுத்து வந்தோம். தற்பொழுது பத்திரிகை ஸ்தாபனத்துடன் மற்றும் ஊடக சங்கங்களுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றோம். ஊடக அடக்குமுறை செயல்பாடுகளை அடக்குவதற்கு தொடர்ந்து செயல்படுகின்றோம். தமிழ் ஊடகவியலாளர்களை பொறுத்தமட்டில் நவீன தொழில் பயிற்சிகள் மற்றும் அனுபவங்களைப் பெற்று அவர்கள் சிறந்த ஊடகவியலாளர்களாக முன்னேற கருத்தரங்குகள் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இவ்வாறான பயிற்சிகளை நாம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு வழங்க எமக்கு பாரிய நிதி உதவி தேவைப்படுகிறது.  தற்பொழுது தமிழ் ஊடகவியலாளர்கள் மிகுந்த சிரமங்களுடனே சேவையாற்றி வருகின்றனர்.

இவர்களில் அதிகமானோர் ஊடக உபகரணங்கள் அல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். இதற்கமைய நாங்கள் இவர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று இங்கு வீற்றிருக்கும் தொழில் அதிபர் ஜீவரெட்ணம் முறேஷ் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம்.

அவரும் இதை உடனே ஏற்று சம்மதம் தெரிவித்து அதை இன்று செயல் வடிவத்தில் காண்பித்துள்ளார். இதற்கு நமது சங்கத்தின் செயலாளர் ஜெயந்திரனின் உறவினரான சாமுவேல் பாலேந்திரனும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

இந்த பொருட்களை நாம் நேரடியாக கொள்முதல் செய்யாதபோதும் இவர்களே நேரடியாக கனணி மற்றும் கையடக்க தொலைபேசிகளை சமந்தப்பட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கொள்முதல் செய்து உடனே எமக்கு கையளித்ததையிட்டு நாம் தொழில் அதிபர் ஜீவரெட்ணம் முறேஷ் அவர்களுக்கு அணைவர் சார்பிலும் நன்றிகளை தெரிவித்து நிற்கின்றேன் என இவ்வாறு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எஸ்.ஸ்ரீகஜன் இவ்வாறு தனது உரையில் தெரிவித்திருந்தார்.