செஞ்சோலைப் படுகொலை; ஒருவரல்ல, இருவரல்ல – 53 பெண் மாணவிகளைப் பலியெடுத்த சிங்கள தேசம்! : தீபச்செல்வன்

செஞ்சோலை இனப்படுகொலையின் வாயிலாக, ஒரே நாளில், சில மணித்துளிகளுக்குள் ஒருவரல்ல, இருவரல்ல, 53 மாணவிகளை இனப்படுகொலைக்குப் பலிகொடுத்தது ஈழ தேசம். சிங்களப் பேரினவாதத்தின் இனக்கொலைப் பசிக்கு எமது தேசத்தின் இளம் குருத்துக்கள் வாரிக்கொடுக்கப்பட்ட அந்தத் துயரத்தை காலம் கடந்தும் மறக்க முடியவில்லை. அந்தக் குழந்தைகளின் குருதி சிந்தப்பட்ட எம் தாய்மண் இன்றும் அவர்களின் பெயர்களைத் தேடுகிறது. இனப் படுகொலையாலும் போராட்டத்தாலும் இளையவர்களின் குருதி சிந்திய இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் தமது மண்ணுக்காகவும் அதன் மாண்புக்காகவும் வாழ வேண்டிய பொறுப்புண்டு.
ஒகஸ்ட் 14, செஞ்சோலைப் படுகொலையின் நினைவு நாள். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் மறக்க முடியாத கறுப்புப் பக்கமாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14 ஆம் திகதி வழக்கம்போலவே பொழுது புலர்ந்தது. எதிர்காலத்தின் கனவுகளைச் சுமந்த பள்ளி மாணவிகள் தலைமைத்துவ மற்றும் முதலுதவிப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் சில நிமிடங்களில் அந்தப் பிஞ்சு உயிர்கள் விமானக் குண்டுகளுக்கு இரையாகின. அது ஒரு சாதாரண தாக்குதல் அல்ல. ஒரு தலைமுறையின் எதிர்காலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். 2006 ஒகஸ்ட் மாத ஆரம்பத்திலேயே வடக்கு மக்கள் மீண்டும் ஒரு கொடிய போரின் இருளுக்குள் தள்ளப்பட்டிருந்தனர். வடக்கிற்கான பாதைகள் மூடப்பட் டன. மக்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காகவே போராட வேண்டிய நிலை ஏற் பட்டது. யாழ்ப்பாணம் தொடக்கம் வன்னி வரை மக்கள் அச்சத்திலும் இருட்டிலும் பசியிலும் வாழ்ந்தார்கள். அந்தச் சூழலில்தான் செஞ்சோலையில் இருந்த மாணவிகள் மீது அரச விமானப்படை குண்டுகளைப் பொழிந்தது.
பாடசாலைகள்மீது குண்டுவீச்சு
சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்திலும் வடக்கு கிழக்கில் விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றன. விடுதலைப் புலிகளின் நிலைகள் என்று கூறிக்கொண்டு மக்கள் வாழ்ந்த பகுதிகள்மீதும், வீடுகள்மீதும், பாடசாலை களுக்கு அருகிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒவ் வொரு தாக்குதலுக்கும் பின்னால் ஒரு காரணம் கூறப்பட்டது. ஆனால் அந்தக் காரணங்களுக்குள் சிக்கியது சாதாரண மக்களின் உயிர்கள்தான். எல்லாமே புலிகளின் முகாம்கள் என்ற அரசின் விளக்கத்தைப் பதிவு செய்துகொண்டிருந்த சர்வதேச அமைப்புகளும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இருந்தன. ஆனால் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை. சர்வதேச கண்காணிப்பும் இருந்தது. சமாதான ஒப்பந்தமும் இருந்தது. இருந்தும் தமிழர் வாழ்விடங்கள் பாதுகாப்பாக இருக்கவில்லை. அந்தப் பின்னணியில்தான் செஞ்சோலை நடந்தது.
இவர்களா பயங்கரவாதிகள்?
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் அனுமதியுடன் தலைமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டது. அந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவிகள்மீதுதான் அரச விமானங்கள் குண்டுகளை வீசின. ஒரு கணத்தில் பிஞ்சு உடல்கள் சிதறின. சுமார் 50 மாணவிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த மாணவிகள் வவுனியா உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிலர் மேலதிக சிகிச்சைக்காக கண்டிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். உயிர் தப்பியவர்கள்கூட அச்சு றுத்தல்களுக்கும் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், கொல்லப்பட்டவர்கள் மாணவிகள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் புலிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கூறி அந்தப் படுகொலையை நியாயப்படுத்த முயன்றது. அந்தப் பிஞ்சு முகங்களைப் பார்த்து எப்படி பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியும்? பாடசாலை மாணவிகளாகப் பயிற்சிக்காகச் சென்றவர்களை விமானக் குண்டுகளால் கொன்று விட்டு, அவர்களின் மரணத்திற்கே குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கொடுமைதான் செஞ்சோலை. பின்னர் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களும் ஐ.நா. அதிகாரிகளும் சம்பவத்தை ஆராய்ந்தனர். அங்கு கூடியிருந்தவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும், தலைமைத்துவப் பயிற்சிக்காக அவர்கள் ஒன்றுகூடியிருந்தபோதே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பதிவுகள் வெளிவந்தன.
காயப்பட்டவர்களைச் சந்தித்தேன்
இப்படுகொலை இடம்பெற்று ஓராண்டுக்குப் பின்னர் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் பணியில் அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். பெற்றோர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்தேன். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உயிர் தப்பிய மாணவர்கள் என பலரையும் சந்தித்தபோது செஞ்சோலை அவர்களுக்குள் ஏற்படுத் தியிருந்த காயத்தின் ஆழத்தை உணர முடிந்தது. காலில் பெரும் காயமடைந்திருந்த ஒரு மாணவி பேச முடியாமல் அழுத காட்சி இன்றும் என்னை விட்டு அகலவில்லை. அந்த மாணவியும் பின்னர் முள்ளிவாய்க்கா லில் கொல்லப்பட்டார். செஞ்சோலைப் படுகொலை தொடர்பான ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகளும் பின்னர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தார்கள்.
அவர்கள் 53 பேரும் நன்றாகப் படிக்கக்கூடிய மாண விகள். அவர்களுக்குக் கனவுகள் இருந்தன. உயர்கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சமூகத்தில் உயர்ந்த இடங்களை அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இன்று வைத்தியர் களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், சமூகத் தலைவர்களாகவும் எம்மோடு இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களது எதிர்காலம் ஒரு விமானக் குண்டுடன் முடிக்கப்பட்டது.
வாய்மூடி இருந்த சர்வதேசம்
செஞ்சோலைப் படுகொலைக்கு உலகம் உரிய பதிலை அளிக்கவில்லை. ஒரு நாட்டின் விமானப்படை பாடசாலை மாணவிகள்மீது குண்டுகளை வீசி 53 உயிர்களைப் பறித்தபோதும் சர்வதேச சமூகத்தின் குரல் போதியளவு எழவில்லை. அந்த மௌனம் பின்னர் நடந்த இன்னும் பெரிய அழிவுகளுக்கு ஒரு துணிவாக அமைந்தது.
மாணவர்களின் உயிர்களைப் பாதுகாக்க முடியாத சமூகம் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியாது. செஞ்சோலைக்குப் பின்னரும் பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். மக்கள் கொல்லப்பட்டார்கள். இறுதி யில் முள்ளிவாய்க்காலில் ஒரு மக்கள் கூட்டமே முற்றுகை யிடப்பட்டு அழிக்கப்பட்டது. செஞ்சோலை ஒரு தனித்த சம்பவம் அல்ல. அது முள்ளிவாய்க்காலுக்கு சென்ற இருண்ட பாதையின் ஒரு முக்கியமான அடையாளம்.
நீதிக்காக ஏங்கும் ஈழ நிலம்
தமிழ் மக்கள் கல்விக்காகப் போராடினார்கள். வேலை வாய்ப்புக்காகப் போராடினார்கள். சம உரிமைக்காகப் போராடினார்கள். ஆனால் எமது பிள்ளைகள் கல்வி கற்கச் சென்ற பாடசாலைகளிலேயே குண்டுகளுக்கு இரையாகினர். சந்திரிகா அரசின் காலத்தில் நாகர்கோவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 39 மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும் செஞ்சோலையில் 53 மாணவிகள் கொல்லப்பட்டார்கள். ஒரு தலைமுறையின் கல்விக்கூடங்களே தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாற்றப்பட்டன.
இத்தகைய படுகொலைகளுக்கு உரிய நீதி கிடைத்திருந்தால், பின்னர் நிகழ்ந்த மாபெரும் அழிவு களுக்கு முன்னரே உலகம் ஒரு எச்சரிக்கையை முன்வைத்திருக்க முடியும். ஆனால் உலகம் அமைதியாக இருந்தது. அந்த அமைதி தமிழர் மண்ணில் மேலும் குருதி சிந்துவதற்கான இடத்தை உருவாக்கியது.  இன்று செஞ்சோலை மாணவிகளின் வயதில் இருக்கும் இளைய தலைமுறை, அவர்களின் புகைப்படங்களைப் பார்க்கிறது. அவர்கள் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை நினைக்கிறது. அவர்கள் அடைய வேண்டிய கனவுகளை நினைக்கிறது. அந்தக் கனவுகளோடு சேர்ந்து நீதியையும் கேட்கிறது.
செஞ்சோலையின் 53 மாணவிகளும் எமது நினைவில் வாழ வேண்டும். அவர்களின் பெயர்கள் மறக்கப் படக்கூடாது. அவர்களின் கொலைகள் மறைக்கப்படக்கூடாது. அவர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். நினைவுகூர்தல் என்பது வெறும் கண்ணீர் சிந்தும் நிகழ்வு அல்ல. மறைக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்லும் போராட்டம். கொல்லப்பட்டவர்களின் பெயர்களை உயிருடன் வைத்திருக்கும் போராட்டம். எதிர்காலத்தில் இன்னொரு செஞ்சோலை நிகழாதபடி எமது பிள்ளைகளின் பாதுகாப்புக்காக எழும் போராட்டம். செஞ்சோலைப் பிள்ளைகளின் குருதி வீணாகவில்லை என்பதை உலகிற்கு சொல்லும் நாளாக ஒகஸ்ட் 14 இருக்கட்டும். அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி, அவர்களுக்கான நீதியைத் தொடர்ந்து கோருவதுதான்.