மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் வெளிக்கொணர்ந்தார்.
வியாழக்கிழமை (13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே இவ்விடயத்தினை வெளிப்படுத்தினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருட்திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் இரவு நேரத்தில் இது தொல்பொருட்திணைக்களத்திற்குரிய இடமென்று பெயர்ப்பலகை நாட்டியுள்ளது.
அந்த பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் ஒரு அபிவிருத்தியும் மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு இரவு நேரத்தில் இவ்வாறு செய்ய முடியும்.
குறித்த ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படாமல் முற்றிலுமாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியுமா என கேட்க விரும்புகிறேன். ஏற்கனவே அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்த இடங்களில் சில பதாகைகள் தொல்பொருட்திணைக்களத்தால் நாட்டப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாகவே இவை தற்போது யாருக்கும் அறியப்படுத்தப்படாமல் நாட்டப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த விடயத்தினை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.



