அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, நீலாவணை மற்றும் கல்லாறு ஆகிய இராணுவ முகாம்களிலிருந்து சென்ற இராணுவத்தினர், விவசாயத்தையும் கடற்றொழிலையும் பிரதான தொழிலாகக் கொண்ட துறைநீலாவணைக் கிராமத்துக்குள் கடுமையான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தரவுகள் கூறுகின்றன.
அன்றைய தினம் காலை வேளையில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வீடுகளுக்குள் புகுந்தும், வீதிகளால் சென்றவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும், பலர் படுகாயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக மாறினர்.
இதன்படி கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று துறைநீலாவணை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.



