பழைய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலுக்கு செல்வதற்கு திடீரென தீர்மானிக்க முடியாது என்றும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள புதியத் தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் செய்து எல்லை மற்றும் தொகுதிகளை அடையாளப்படுத்தியதன் பின்னர் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த தயாராகவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக எல்லை நிர்ணய விவகாரத்துக்கு உரிய தீர்மானம் எட்டப்பட்டால் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம்.
புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் உருவாக்கப்படவில்லை.
ஆகவே மாகாணசபைத் தேர்தலை நடத்தும் திகதியை தற்போது உறுதியாக குறிப்பிட முடியாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் அனைவரும் வேண்டாம் என்று குறிப்பிடும் விருப்பு வாக்கு, ஊழல் மிக்க, தொகுதிக்கு உறுப்பினர் இல்லாத, பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாத பழையத் தேர்தல் முறைமைக்கு செல்வதற்கு திடீரென தீர்மானிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
பழைய தேர்தல் முறைமைக்கு செல்வதற்கு மக்கள் விரும்பவில்லை.
மீண்டும் அந்த முறைமைக்கு செல்வதற்கு மக்கள் விரும்பினால் அது குறித்து ஆராயப்பட வேண்டும்.
தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் செய்து எல்லை மற்றும் தொகுதிகளை அடையாளப்படுத்தியதன் பின்னர் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த தயாராக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.



