சிங்கள தேசத்தில் தமிழர்களுக்கு நடந்த அநீதிகள் மற்றும் படுகொலைகள் பல்வேறு தளங்களில் பேசப் படுவதுடன் அதற்கான நீதிகோரிய போராட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
இந்த நாட்டின் ஆதிக்குடிகளாக இருந்த இனம் இன்று இரண்டாம் நிலை இனமாக மாற்றப்பட்டு இந்த நாட்டின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் இன்று இந்த நாட்டில் எங்களுக்கு உரிமைவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு போராடிவரும் நிலையில் இந்த நாட்டில் அந்த இனம் எதிர்கொண்ட அடக்குமுறைகளும் இனஅழிப்புகளும் எண்ணிலடங்காதவையாகவே இருந்துவருகின்றது.
இனஅழிப்பு தொடர்பில் பல்வேறு தளத்தில் பல் வேறு வகையிலான நீதிக்கோரிக்கைகளும் நினைவேந்தல் களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்புகள் என்பது வரலாற்றுச்சுவடுகளாக நோக்கப் படுகின்றன.
வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் நடந்த நிகழ்வு கள் வெறும் சிவில் போரின் பக்கவிளைவுகள் மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் தனித்துவத்தையும் வாழ்வியலையும் முறைப்படியாகச் சிதைக்க முயன்ற திட்ட மிட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே வரலாற்று ஆசிரியர்களாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளா லும் பார்க்கப்படுகின்றன.
இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிகள் முறைப்படியான வரலாற்று கடத்தலாக செய்யப்பட வேண்டும் என்பதுடன் அது தொடர்பிலான நீதிகோர வேண்டிய கட்டாய நிலைமை தமிழர்களுக்கு இருக்கின்றது.குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் கடந்த கால விடயங்களை ஒரு கசப்புணர்வான விடயமாக கடந்துசெல்லபார்க்கும் நிலைமை இன்று உணரப்படுவதுடன் பல படுகொலைகள் தொடர்பான விபரங்கள் அறியாத நிலைமையும் இருக்கின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணம் எதிர்கொண்ட பல படுகொலைகளுக்கான நீதிகோரும் வழிமுறைகள் என்பது முற்றாக மறக்கப்பட்ட நிலைமையும் அந்த படுகொலைகளை நினைவுகூரும் செயற்பாடுகளும் கைவிடப்படும் நிலைமையுமே இன்று இருந்துவருகின்றது.இந்த செயற்பாடு எதிர்காலத்தில் கிழக்கில் தமிழர்கள் எதிர்கொண்ட வலிகளை எதிர்கால சமூகம் மறந்துசெல்லும் நிலையை ஏற்படுத்துவதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் இலகுவில் தப்பிச்செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது.கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை வெறுமனே யாரும் ஒரு துன்பியல் நிகழ்வாக கடந்துசெல்லவேண்டாம் என்பதே எமது கோரிக்கையாகும்.
மறதி என்பது மனித இயல்பு ஆனால், கூட்டு நினைவுகளும் வரலாற்றில் ஆறாத வடுக்களாக மாறிய நிகழ்வுகளும் ஒருபோதும் அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடிவதில்லை. இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணம்—மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைக் கொண்ட வளமான பூமி—35ஆண்டுகா காலப் போரிலும் இன மோதல்களிலும் சந்தித்த வடுக்களும் இழப்புகளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. கிழக்கில் தமிழ் மக்கள் சந்தித்த படுகொலைகள் நினைவு களிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் மறக்கப்பட முடியாதவை.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் இறால் பண்ணைத் தொழிலாளர்கள் உட்பட 80க்கும் மேற் பட்டோர் 1987 இலும், பின்னர் 1991இல் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் கிழக்கின் நெஞ்சை உலுக்கிய சோகங்கள். இதேபோன்று மட்டக்களப்பு சத்ருக்கொண்டான், பிள்ளையாரடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 180க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் ஒரே நாளில் படுகொலை செய் யப்பட்டு, உடல்கள் அழிக்கப்பட்ட கொடூரம்.
அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சம் புகுந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதும், பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொண்டுசெல்லப்பட்டு பலவந்தமாகக் காணாமல் ஆக்கப் பட்டதும் கிழக்கின் வரலாற்றில் கறைபடிந்த பக்கங்கள். வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தில் தஞ்சம் அடைந்திருந்த ஆயிரக்கணக்கான அகதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை.அம்பாறை மாவட்டத்தின் திராய்கேணியில் 54பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.இவ்வாறு கிழக்கில் நடந்த படுகொலைகள் நீண்டுசெல்லும்.இந்த படுகொலைகள் தொடர்பில் நான் கடந்த காலங்களில் கட்டுரைகளை எழுதி யிருக்கின்றேன்.
ஆனால் இன்று இந்த கட்டுரையினை எழுது வதற்கு காரணம் கிழக்கில் தமிழர்களுக்கு நடந்த படு கொலைகளைப்பற்றி கதைப்பதற்கு இன்றும் யாரும் அற்ற நிலைமையே காணப்படுகின்றது.இன்று நாங்கள் செம்மணி மனித புதைகுழிகளுக்காக பல்வேறு போராட்டங்களையும் பல்வேறு கவன ஈர்ப்புகளையும் வடகிழக்கில் முன்னெடுக் கின்றோம்.தமிழர்களுக்கு நடந்த அநீதிகளின் ஒரு நேரடி சாட்சியாக இன்று செம்மணி மாறியிருக்கின்றது.இதனை வெளிப்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத் தவர்களை நாங்கள் வரவேற்கின்றோம்.செம்மணிபோன்று பல புதைகுழிகள் கிழக்கில் புதைந்து கிடக்கின்றன.
அவற்றினையும் தோண்டவேண்டும்.அந்த புதைகளுக்கு பின்னால் உள்ள பலர் இன்றும் நடமாடித்திரிகின்றனர்.குறிப்பாக சத்துருக்கொண்டான் படுகொலை,வீரமுனை படுகொலை, திராய்க்கேணி ஆகிய படுகொலைகளில் பங் கெடுத்த பல முஸ்லிம் ஆயுத தாரிகள் இன்றும் நடமாடித் திரிகின்றனர்.
இன்று காத்தான்குடி படுகொலைகளை முஸ்லிம்கள் நினைவுகூருகின்றனர்.கிழக்கில் முஸ்லிம்களு க்கு அநீதி நடைபெற்றுள்ளதாக காட்டுவதற்காக அதனைக் கொண்டு சிலர் சிவில் செயற்பாட்டாளர்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.ஆனால் கிழக்கில் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை பேசுவதற்கு தமிழர்களாகிய நாங்களே தயாராக இல்லாத நிலையே இருந்து வருகின்றது.
கிழக்கில் தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளை வரலாற்று ரீதியாகவும், சர்வதேச தரத்திலான ஆவணங் களாகவும் மாற்றுவதில் தமிழர்களாகிய நாம் தவறிவிட்டோம்.வரலாற்றை எழுதாத சமுதாயம் தன் அடையாளத்தை இழக்கும். இன்று இளைஞர்கள் மத்தியில் இந்த வரலாற்றுச் சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வு குறைந்து வருவதற்குக் காரணமே, மூத்த தலைமுறையினரும் தமிழ் தேசியம்சார்ந்து செயற்படும் பலரும் இது பற்றித் பேசத் தயங்குவதுதான் முக்கிய காரணமாக என்னால் பார்க்கப்படுகின்றது.
கிழக்குமாகாணத்தினைப் பொறுத்த வரையில் கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான நடந்த அனைத்து படு கொலைகளுக்கும் பக்கபலமாக முஸ்லிம் ஆயுதக்குழுக் களே இருந்துவந்தன.ஜிகாத் உட்பட பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் கிழக்கில் தமிழர்களை அழித்துதனி கிழக்கிஸ் தானாக மாற்றுவதற்கான முயற்சிகளை மும்முரமாக முன் னெடுத்ததன் விளைவாகவே கிழக்கில் அத்தனை மனித படுகொலைகளும் நடந்தன.
இன்று வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட தாக முஸ்லிம்களும் சில சிவில் செயற்பாட்டாளர்களும் சில மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கூறிவரும் நிலை யில் கிழக்கிலிருந்து தமிழர்களை கருவறுக்க முன்னெடுக் கப்பட்ட இஸ்லாமிய ஆயுததாரிகள் குறித்து பேசுவதற்கு முற்படுவதில்லை.
இலங்கையின் கிழக்கு மாகாணம் நீண்டகாலமாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மொழியாலும், புவியியல் ரீதியாகவும் பிணைந்து வாழ்ந்து வந்த ஒரு பிராந்தியமாகும். எனினும், 1980களின் பிற்பகுதியில் உருவெடுத்த ஆயுதப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து அரசு முன்னெடுத்த பிரித்தாளும் தந்திரோபாயங்களும் இரு சமூகங்களுக்கும் இடையில் பாரதூரமான விரிசல்களையும், மோதல்களையும் தோற்றுவித்தன. இதில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் மற்றும் ஊர்காவல் படைகளின் தோற்றமும் செயல்பாடுகளும் கிழக்கின் இன உறவில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தின.
ஒரு சமூகத்தின் வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் படுகொலைகளுக்கும் நீதி கோருவது என்பது வெறும் கடந்த காலத்தைப் பற்றிய கவலை மட்டுமல்ல அது அச்சமூகத்தின் எதிர்காலப் பாதுகாப்பு, அரசியல் அடையாளம் மற்றும் மனித கண்ணியத்தை உறுதிசெய்வதற்கான அடிப்படைத் தேவையாகும். இலங் கையின் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் மூன்று தசாப்த காலப் போரிலும், அரச மற்றும் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களின் வன்முறைகளிலும் சந்தித்த இழப்பு கள் சொல்லொணாதவை. வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட முயலப்படும் இந்த படுகொலைகளுக்கான நீதிக்கோரிக்கைகள் சர்வதேச மற்றும் தேசிய மட்டங் களில் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற அளவுக்கு, கிழக்கு மாகாணத்தில் அரங்கேறிய பல கொடூரமான படுகொலைகள் உரிய முறையில் ஆவணப்படுத்தப்படாமலும், சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படாமலும் விடப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்கள் நடந்து தசாப்தங்கள் கடந்தும், குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையான நீதி வழங்கப்படவோ இல்லை.
பாதிக்கப்பட்ட தரப்பு தனது நீதிக்கான குரலை உயர்த்தத் தவறினால், அநீதி இழைத்த தரப்பு வரலாற்றைத் தன் வசதிக்கு ஏற்பத் திரித்து எழுதும் அபாயமும் உள்ளது. கிழக்கில் தமிழர்களுக்கு நடந்தவை வெறும் “போரின் பக்கவிளைவுகள்” அல்ல அவை திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளின் அங்கமே என்பதை வரலாற்றுப் பதிவாக மாற்ற நீதிக்கோரிக்கைகள் மிக முக்கியமானவை. எனவே, நீதிக்கான பயணம் என்பது உணர்ச்சிப் பூர்வமான பேச்சுக்களோடு நின்றுவிடாமல், முறையான மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த உத்திகளுடன் முன்னெடுக் கப்பட வேண்டும். நடைபெற்ற படுகொலைகள், சாட்சி யங்கள், திகதிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் விபரங் களைச் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் வழி காட்டல்களுக்கு அமையச் சட்ட ரீதியாக ஆவணப்படுத்த வேண்டும். கிழக்கின் அரசியல் தலைமைகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நீதிக்கான ஒரு கூட்டுப் போராட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
அதேநேரம், இன்றைய இளைஞர்கள் நவீன டிஜிட்டல் ஊடகங்கள், சர்வதேச மொழிகள் மற்றும் சட்டப் புலமையைப் பயன்படுத்தி, கிழக்கின் அநீதிகளை உல கரங்கிற்கு எடுத்துச் செல்ல முன்வர வேண்டும். உண்மையான நீதியும் கணக்குக்கூறலும் இல்லாமல் உருவாக்கப்படும் எந்தவொரு நல்லிணக்கமும் தற்காலிகமானதே. கிழக்கு மண்ணில் சிந்தப்பட்ட அப்பாவித் தமிழர்களின் குருதிக்கு நீதி கோருவது என்பது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல மாறாக, அது இழந்த மனிதக் கண்ணியத்தை மீட்டெடுக்கும் புனிதமான கடமையாகும். தமிழர்களாகிய நாம் நமது கூட்டு மௌனத்தைக் கலைத்து, கிழக்கின் படுகொலைகளுக்கான நீதிக்கோரிக்கையைத் சர்வதேச தளத்தில் உறுதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுப்பதே, படுகொலையான நமது உறவுகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.



