ட்த்வா புயல் அனர்த்தத்தின் பின்னரான புனரமைப்புக்கள் மற்றும் வாழ்வாதார உதவித்திட்டங்களை’ அமுல்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,
ட்த்வா புயல் அனர்த்தத்தின் பின்னரான புனரமைப்புக்கள் மற்றும் வாழ்வாதார உதவித்திட்டங்களை’ அமுல்படுத்துவதற்காக கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக 2026.06.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், குறித்த கடன் வசதியின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சலுகை பொது மூலதன வளங்களிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் நிரந்தர பொது மூலதன வளங்களிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொல்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீதி உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் மற்றும் மீள்நிர்மாணித்தல், சேதமடைந்துள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வீடுகளை இயல்பு நிலைமைக்குக் கொண்டு வருதல் போன்ற மூன்று முக்கிய கூறுகளுக்கு இக்கடன் வசதியைப் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த நிதி வசதிகளைப் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைய நிதி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.



