போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற “ரதம ஏகத” (நாடு ஒன்றுபடும்) தேசிய நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தின்போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தீவிரமடைந்து வரும் போதைப்பொருள் நெருக்கடி மற்றும் அதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத வருமானம், குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் வலையமைப்பின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக விழுமியங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஏனைய குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துவதற்கு வலுவான சட்டங்களும் நடவடிக்கைகளும் அவசரமாகத் தேவைப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சமூகத்திற்குத் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதுடன், எதிர்கால சந்ததியினருக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளும், பொதுமக்களின் அணுகுமுறையில் மாற்றமும் அவசியம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதில் மதத் தலைவர்கள், பெற்றோர் மற்றும் சமூக அமைப்புகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதனிடையே, போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை நடைமுறைகள் தொடர்பான சட்டத் திருத்தங்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அவை விரைவில் அரசிதழில் வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவை அடிப்படையாகக் கொண்டு, ஐந்து கிராமுக்கும் குறைவானவை மற்றும் 10 கிராமுக்கும் குறைவானவை என போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை வகைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்புடைய பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேகநபர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வகையில், காவல்துறை, சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.
தற்போது நிலவும் நிலுவைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை கடற்படையின் உதவியைப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சட்ட அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு கமராக்களை நிறுவுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



