22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நீதிமன்றில் மனுதாக்கல்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கு அமைவாக, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்காக வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, எதிர்வரும் புதன்கிழமை (12) நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நகர்வு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக இத்தகைய மாற்றங்களை மேற்கொள்ளவே முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளை நினைவூட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது நலம் சார்ந்த பிணைப்போ உள்ள எந்தவொரு அரச அதிகாரியும் அது தொடர்பான முடிவுகளிலோ அல்லது வாக்களிப்பிலோ பங்கேற்க முடியாது என்றும், மீறினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்ற நீதியரசர்களும் ‘அரச அதிகாரிகள்’ என்ற வரையறைக்குள்ளேயே அடங்குவதால், தங்களின் சொந்த ஓய்வுபெறும் வயது தொடர்பான இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் சட்டரீதியான அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு கிடையாது என்றும் ஜி.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.

அரசாங்கம் அவசர அவசரமாக நிறைவேற்றத் துடிக்கும் இந்தச் சட்டமானது, ஒரு குறிப்பிட்ட நபரைக் குறித்த அல்லது ஒருசிலரை மட்டும் இலக்கு வைத்து உருவாக்கப்படும் சட்டமாகும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.