நுவரெலியா – வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில், மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வரும் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு வெளியாட்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு (07) சுமார் 10 மணியளவில், இவ்வாறு புத்தர் சிலையை வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை கிராம மக்கள் அவதானித்ததையடுத்து, உடனடியாக ராகலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினரின் உதவியுடன், புத்தர் சிலையை அங்கு நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் வழிபாடு மற்றும் காவல் தெய்வ வழிபாடு இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், அப்பகுதி மக்களின் அனுமதியின்றி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் குறித்த இடத்தில் சிலையொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ராகலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



