ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் நடத்திய சந்திப்பின் போது, கிழக்கு மாகாண மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வரும் மகாவலி விவகாரம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
ஆனால், இன்று (04) பாராளுமன்றத்தில் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, கிவுல் ஓயா திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும், அரசாங்கம் அதனை கைவிடப் போவதில்லை என்றும் தெளிவாக தெரிவித்தார்.
இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுமாயின், அதற்கு முன்னர் பாதிக்கப்படவுள்ள மக்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, அவர்களின் காணி உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் தேசிய இன விகிதாசாரத்தில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பான அச்சங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை மகாவலி அதிகார சபையின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்கப்படவில்லை.
ஆனால், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மகாவலி திட்டத்தின் கீழ் நீர் வழங்கப்பட்டுள்ளது.
இது வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதிரான பாரபட்சமான அணுகுமுறையாகும் என்றும் சாணக்கியன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“இன்றைய பிரதான பிரச்சினை நீர் விநியோகம் அல்ல. மகாவலி திட்டத்தின் கீழ் காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் விதமாகும். அமைச்சர் எந்தவொரு காணியும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஆனால், மணலாறு பகுதி “வெலிஓயா” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மகாவலி அதிகார சபையின் ஊடாக திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று அந்தக் குடியேற்றங்களுக்கு நீர் வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று சாணக்கியன் கூறியுள்ளார்.
“எனவே, மகாவலி அதிகார சபையின் உண்மையான நோக்கம் வெறுமனே நீர் விநியோகம் அல்ல; மாறாக, வடக்கு மற்றும் கிழக்கின் தேசிய இன விகிதாசாரத்தை மாற்றும் வகையில் திட்டமிட்ட குடியேற்றங்களை உருவாக்குவதே என்ற எமது நீண்டகாலக் கவலை மேலும் வலுப்பெறுகிறது”.
“மேலும், “மயிலத்தமடு” என்ற பெயரில் எந்த இடமும் அரசாங்கப் பதிவுகளில் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், இன்று (04) காலை மயிலத்தமடு – மாதவனை பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அத்துடன், மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோத குடியேற்றங்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, அப்பகுதியில் வாழும் கால்நடை வளர்ப்பாளர்களும் பால் பண்ணையாளர்களும் தங்களது பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக அச்சுறுத்தப்படுகிறது” என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
“மாதவனை பகுதியை மேய்ச்சல் தரைப் பகுதியாக வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிப்பதாக அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், அமைச்சரின் பதிலில் அதற்கான எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அந்தப் பகுதியின் அளவீட்டுப் பணிகள் கூட இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்”.
“மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக நுழைந்து பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியேற்றங்களை அமைத்து வருகின்றனர்.
இந்த நிலை தொடருமானால், எதிர்காலத்தில் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் புதிய குடியேற்றவாசிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடையும் அபாயம் உள்ளது”.
“எனவே, அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து, சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுத்து, மயிலத்தமடு – மாதவனை கால்நடை வளர்ப்பாளர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களையும் வாழ்வாதார உரிமைகளையும் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
“அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கின் தேசிய இன விகிதாசாரத்தை மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு குடியேற்றத் திட்டத்தையும் நாம் ஒருபோதும் ஏற்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



