பிரித்தானியாவின் புதிய பிரதமர் மாண்பமை அன்டி பேர்ணம் அவர்களுக்கும் புதிய அமைச் சரவைக்கும் பிரித்தானியாவில் இருந்து எழும் சமுக ஊடகம் என்ற உரிமையுடன் இலக்கு ஆசிரிய குழு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய பிரதமர் அன்டி பேர்ணம் அவர்கள் பலஸ்தீனத் தேசிய பிரச்சினையின் சமகாலத் தன்மையை விளங்கிக் கொண்டவராக பிரித்தானியாவின் பதவி விலகிய பிரதமரின் ஆட்சிக்காலத்தில் பலஸ்தீனியர்களுக்கு உரிய அதரவு வழங்கப்படவில்லையெனக் கவலை தெரிவித்து இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்வதின் வழி பலஸ்தீனியர்களின் தேசிய பிரச்சினைக்கு ஏற்புடைய தீர்வுக்கு வழிகாட்ட முயற்சிக்கப் போவதாகக் கூறியுள்ளார். இனங்களின் தேசிய பிரச்சினைகளுக்கு ஏற்புடைய தீர்வு தேவையென்ற மனநிலை கொண்ட மாண்பமை அன்ரி பேர்ணம் அவர்களுடனான பிரித்தானியத் தமிழர்களின் கலந்துரையாடல் மூலமாக ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினை என்பது பிரித்தானிய காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினை என்பதையும் அதனைத் தீர்த்து வைப்பது அதனைத் தொடக்கி வைத்த பிரித்தானிய அரசின் கடமை என்பதையும் அவருக்கு விளக்க வேண்டிய காலமிது என்பதை 1983 யூலை சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பின் 43 வது ஆண்டில் அதன் வலிசுமந்து அதற்கான அனைத்துலக நீதியையும் செம்மணி ஈழத்தமிழின இனப்படுகொலைகளுக்கான அனைத்துலக நீதியையும் தாயகத்திலும் அனைத்து உலகிலும் ஈழத்தமிழர்கள் கோருகின்ற இவ்வாரத்தில் இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
இன்று பிரித்தானியா தனது பாதுகாப்புக்கு பெருந்தொகையான நிதியினைச் செலவிட வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரித்தானியாவின் அனைத்துலகப் பாதுகாப்பு முயற்சியில் திருகோணமலைத் துறைமுகத்தின் புவியியல் இருப்பின் முக்கியத்துவத்தை ஈழத்தமிழர்கள் புதிய பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் எடுத்துரைக்க வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
பிரித்தானியா இரண்டாம் உலகப் போர் காலத்தில் யப்பானின் குண்டுவீச்சில் இருந்து திருகோணமலையைப் பாதுகாத்த பின்னரே தனது தெற்காசிய தென்கிழக்காசிய படைநிலைகளை மறுசீரமைப்புச் செய்து மவுண்ட்பேட்டன் அவர்களால் புதுடில்லியில் இருந்த பிரித்தானிய தெற்காசிய தென்கிழக்காசிய படைத்தலைமைத்துவம் 15.04. 1944 இல் கண்டிக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்துமாகடலில் பிரித்தானியக் கடற்படை சக்தி படைத்ததாக மாறியது என்பது வரலாறு. இதனை உறுதி செய்யும் வகையில் இரண்டு மாதத்துள் 06.06. 1944 இல் நோர்மண்டியில் பிரித்தானியக் கூட்டுப்படைகள் தரையிறங்கிய வரலாற்றுப் பரிணாமம் ஏற்பட்டது. பிரான்சில் தரையிறங்கி ஒரு கிழமைக்குள் 15.06. 1944 இல் பிரித்தானிய வைட்ஹோல் இலங்கைக்கு ஆணைக்குழுவொன்றை அனுப்பி சுதந்திரம் கொடுப்பதற்கான அரசியலமைப்புச் சீர்திருத்தம் செய்தலை தொடங்கி சுதந்திரம் வழங்கப்பட்டாலும் தொடர்ந்தும் திருகோணமலையில் கடற்படைத் தளத்தை வைத்திருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த பின்னணியிலேயே 01.09.1944 இலேயே திருகோணமலையில் பிரித்தானியக் கடற்படையின் மருத்துவராகக் கடமையாற்றிய தமிழ்நாடு வடஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ் பொன்னையா அவர்களால் யாழ்ப்பாண வன்னி அரசாக பிரித்தானிய காலனித்துவம் கைப்பற்றிய ஈழத்தமிழர் தாயகம் சிலோன் தமிழ் என்று அதனைப் பிரித்தானியா தனிநாடாகச் சுதந்திரம் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை பிரித்தானிய அரசிடம் எழுப்பப்பட்டது.
மருத்துவர் எஸ் பொன்னையா அவர்கள் “தமிழ் சிலோனுக்கும் மற்றைய சிலோனுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்னும் தலைப்பில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் காலனித்துவ அரசுக்களுக்கான செயலாளராக இருந்த ஸ்டான்லி ஒலிவர் பிரட்ரிக் ஜோர்ஜ் அவர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் முதன் முதலில் தமிழ் சிலோனுக்கும் மற்றைய சிலோனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஸ்பெயினுக்கும் போர்த்துக்கலுக்கும், நோர்வேக்கும் சுவீடனுக்கும், கொலண்டுக்கும் பெல்ஜியத்துக்கும், எக்குடோருக்கும் பிரேசிலுக்கும், அல்ஸ்டருக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான வேறுபாடுகளை விட மிக அதிகம் என்பதனை எடுத்து விளக்கினார்.
வரலாற்றில் இனத்துவத்தன்மையில் மொழியில் சமயநம்பிக்கையில் பண்பாட்டில் வழக்கங்களில் நடத்தைகளில் அரசியலில் நாகரிகத்தில் வாழ்வின் இலட்சியங்களில் சிலோனில் வாழும் மற்றவர்களிடமிருந்து வேறுபாடுகளைக் கொண்டவர்களாகத் தமிழ் சிலோனில் வாழ்பவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சில தன்னல நோக்குள்ள அரசியல்வாதிகள் தமிழ் சிலோனுக்கும் ஏனைய சிலோனுக்கும் இடையில் செயற்கையான ஒட்டுக்கள் போட முயல்கின்றனர். ஆனால் தமிழ் சிலோன் அதனளவில் தனியான அலகு. தமிழ் சிலோனைத் தனிநாடாகச் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அப்பொழுது தமிழ் சிலோன் இந்தியாவுக்கும் மற்றைய சிலோனுக்குமான இணைப்புப்பாலமாகவும் பரிணாமம் பெறும். இது நடைபெறாவிட்டால் தமிழர்கள் எத்தகைய இனஅழிப்புக்களை பண்பாட்டு அழிப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் மிகத்தெளிவாக விளக்கி எச்சரிக்கவும் செய்திருந்தார்.
ஆயினும் பிரத்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்கள் இதற்கு செவிசாய்க்காத நிலையில் தான் 29.10.1944இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜிஜி பொன்னம்பலம் அவர்களால் அமைக்கப்பட்டது. இதன் மூலமாகவே பிரித்தானியா கொண்டு வரவிருந்த அரசியலமைப்பு மாற்றத்தை சட்டரீதியாக சந்திப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. தமிழ் காங்கிரஸ் அமைக்கப்பட்டு சில கிழமைகளில் 22.12.1944இல் சோல்பரிப் பிரபு இலங்கையை வந்தடைந்தார். சோல்பரி அரசியலமைப்பே ஈழத்தமிழர் இறைமையை சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் உள்ளடக்கியது. இவ்வாறு 1833இல் பிரித்தானிய காலனித்துவம் செயற்கையாக உருவாக்கிய சிலோன் என்ற நாட்டுக்கும் சிலனிஸ் என்ற செயற்கையான தேசியத்துக்கும் 04.02.1948இல் சுதந்திரம் வழங்கியது. ஆயினும் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) பிரிவு மதத்துக்கோ அல்லது இனத்துக்கோ எதிரான சட்டங்கள் சிலோன் பாராளுமன்றத்தில்
இயற்றப்பட்டால் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்ய அனுமதித்து தொடர்ந்தும் மாண்பமை 2வது எலிசபெத் மகாராணி அவர்களே சிலோனின் அரசத் தலைவியாகவும் தொடர அனுமதிக்கப்பட்டது.
இந்த அரசியலமைப்புச்சட்டத்தைப் பயன்படுத்தியே கோடீஸ்வரன் வழக்கில் பிரித்தானியப் பிரிவிக் கவுன்சில் இடம் சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிராக மேன் முறையீடு செய்த பொழுது பிரித்தானிய பிரிவிக் கவுன்சில் வழங்கிய தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து 22.05. 1972 இல் சிங்கள பௌத்த குடியரசை சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக்கட்சியும் இடதுசாரிக் கூட்டணியினரும் ஏற்படுத்தினர். 1934 இல் ஜி. ஜி. பொன்னம்பலம் ஈழத்து அரசியலில் தலைமைத்துவத்தை தொடங்கிய காலம் முதல் 1972 வரையான 38 ஆண்டு கால அவரின் அரசியல் செயற்பாடுகளும் 1944 முதல் இக்காலம் வரையான 28 ஆண்டு கால அகில இலங்கைத் தமிழக் காங்கிரசின் அரசியல் வரலாறும் மீள்வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலே இக்காலத்து ஈழத்தமிழரின் இறைமையின் இருப்பின் சட்டத்தன்மை தெளிவாகும். அவ்வாறே 1949 முதல் 1976 வரை தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைக்கட்சியாக விளங்கிய தமிழரசுக்கட்சியின் வரலாறும் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டாலே 1972ம் ஆண்டுக்குப் பின்னரான ஈழத் தமிழரின் அரசற்ற தேசஇன நிலையில் அவர்களின் இறைமையை மீளுறுதி செய்வதற்கான மக்கள் இறைமை குறித்த அனைத்துலக சட்ட நிலை தெளிவாகும்.
இந்த இறைமையை மீளுறுதி செய்யும் நடைமுறையை 22.05 1972 க்குப் பின்னர் 06.02. 1975ம் திகதிய காங்கேசன் துறை அடையாளக் குடியொப்ப தமிழீழத்துக்கான மக்களாணையின் வழி 14.05. 1976ம் திகதிய வட்டுக்கோட்டைத் தீர் மானத்தை விளக்கிச் சிறிலங்கா தேசிய அரச சபையில் தந்தை செல்வநாயகம் அவர்கள் 19.11. 1976 இல் ஈழத்தமிழரின் தன்னாட்சிப் பிரகடனமாகப் பிரகடனப்படுத்திச் சிங்கள பௌத்த சிறிலங்காப் பாராளமன்ற அரசியலமைப்புக்கு ஈழத்தமிழர்களின் இறைமையை ஆட்சிக்குட்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தன்மையில்லையென உலகிற்குத் தெளிவாக்கிப் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார்.
1972 இல் பிரித்தானிய காலனித்துவ அரசிடமிருந்து ஈழத்தமிழரிடமே மீண்டு விட்ட மக்கள் இறைமையின் அடிப் படையில் ஈழத்தமிழரின் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையினைக் கொண்டு அவர்கள் தங்களுக்கான பாதுகாப்பினை அமைதியுடனும் வளர்ச்சியுடனும் கூடிய தன்னாட்சியை அமைக்கப் போவதாக அறிவித்தார். 21.07. 1977 ம் திகதிய சிறிலங்காத் தேர்தலை ஈழத்தமிழர்களின் தாயகமான தமிழீழத்தில் மீளவும் இறைமையுள்ள மக்களாக தன்னாட்சியை உருவாக்குவதற்கான குடியொப்பமாக தமிழர் விடுதலைக்கூட்டணியினர் முன்னிறுத்தி 24 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் வழி ஈழத்தமிழரின் பிரதிநிதிகளில் மூன்றில் இரண்டு பலத்துடன் ஈழத்தமிழர் தன்னாட்சியை அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைய சனநாயகவழிகளில் அமைப்பதை சிறிலங்கா ஏற்காவிட்டால் வேறு எந்த வழியிலும் அடைவோம் என உலகிற்கு அறிவித்தனர்.
இந்த ஈழத்தமிழரின் மக்களாணையின் அடிப்படையிலேயே 1978 முதல் 2009 வரை இலங்கைத் தீவில் இரு அரசுக்கள் என்ற உண்மைநிலையை உலகிற்கு உள்ளக தன்னாட்சி உரிமையைச் (Internal Self- determination) செயல்படுத்தி தெளிவாக்கிய ஈழத்தமிழரின் நடைமுறையரசு தேசியத் தலைமையுடனும் சீருடை அணிந்த முப்படைகள் நிர்வாகம் என்பவற்றுடன் 31 ஆண்டுகள் நடைமுறையரசை (De facto) முன்னெடுத்து சட்டவாட்சிக்கான (De-jure) உலகின் அங்கீகாரத்தை வெளியக தன்னாட்சி உரிமையின் (External Self- determination) அடிப்படையில் கோரிநின்ற நிலையில் 18.05.2009இல் சிறிலங்கா 146000 ஈழத்தமிழரைத் தேசமாகவே இனப்படுகொலை செய்து மீளவும் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிச் சிறிலங்காகப் பாராளுமன்றத்தின் கொடுங்கோன்மை ஆட்சியை படைபலத்தால் ஈழத்தமிழரின் அரசியல் பணிவைப் பெறும் பெறும் வகையில் கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்கின்றனர்.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களின் பிரிக்கவியலாத தன்னாட்சி உரிமையினைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் தமக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் பெற இயலாதவாறு பிரித்தானிய காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை தொடர்வதைப் பிரித்தானியப் பிரதமர் மாண்பமை அன்டி பேர்ணம் அவர்களுக்கும் அவரது அமைச்சரவைக்கும் எடுத்துரைக்கும் உரையாடல்களை வேகப்படுத்தி இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திப் பலஸ்தீனர்களின் தேசிய பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்க பிரித்தானியாவின் பிரதமர் அன்டி பேர்ணம் அவர்கள் முயற்சிப்பது போல சிறிலங்காவுக்கும் ஏற்புடைய அழுத்தங்களை மேற்கொண்டு ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதன் வழி அவர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான உறவினை வளர்த்து அவர்களின் திருகோணமலையில் பிரித்தானியா தனது முதலீடுகளை மேற்கொண்டு பிரித்தானியாவின் பாதுகாப்பையும் உச்சப்படுத்த வேண்டும் என்பதை பிரித்தானியத் தமிழர்கள் தங்கள் உரையாடல்கள் வழி அடைய வேண்டுமென்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
ஆசிரியர்




