இராகலைச் சம்பவம்: மலையகத்தின் நூற்றாண்டுகால நிலமற்ற வாழ்வின் சாட்சியம்:மருதன் ராம்

“ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையின் அடித்தளம் அதன் நில உரிமை.” இந்த அடிப்படை உண்மையை மீண்டும் நினைவூட்டிய சம்பவமாகவே நுவரெலியா மாவட்டத்தின் இராகலை சென்ட் லியோனார்ட்ஸ் (St. Leonard’s) தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆறு குடும் பங்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இது திடீர் வெளியேற்றமாக சித்தரிக்கப்பட்டாலும், பின்னர் வெளியான தகவல்கள் இந்த விவகாரத்தின் பின்னணியில் சுமார் 26 ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டம், உரிமைத் தகராறு, நிர்வாக அலட்சியம் மற்றும் மிக முக்கியமாக மலையக மக்களின் நில உரிமை இல்லாத நிலை ஆகியவை வெளிப்படுகின்றன.
இந்த சம்பவம் ஆறு குடும்பங்களின் பிரச் சினை மட்டுமல்லாது மலையக சமூகத்தின் எதிர் கால வாழ்வுரிமையைப் பற்றிய மிகப் பெரிய தேசிய விவாதமாகும். இராகலை நடுக்கணக்கு (St. Leonard’s) தோட்டத்தில் 1990களில் லயன் குடியிருப்புகளின் கூரை களைப் புனரமைக்கும் பணிக்காக வந்த தொழிலாளர் களுக்கான தற்காலிக தங்குமிடங்களாக சில வீடுகள் அமைக்கப்பட்டன. பின்னர் அந்த இடத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களைச் சேர்ந்த ஆறு குடும்பங்கள் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டனர்.
ஆனால் அவர்கள் வாழ்ந்த சுமார் 16 பேர்ச்சஸ் காணி நீண்டகாலமாக உரிமைத் தகராறுக்கு உட்பட்டிருந்தது. 2000ஆம் ஆண்டு தனியார் ஒருவர் அந்தக் காணிக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார். சுமார் 26 ஆண்டுகள் நீடித்த வழக்கின் இறுதி தீர்ப்பு 2025 ஜனவரி மாதம் வழங்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் அங்கிருந்த ஆறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வழக்கில் தொடர்ந்து ஆஜரா கியிருந்ததாகக் கூறினாலும், இறுதி தீர்ப்பு தொடர்பாக தங்களுக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை என்றும், தோட்ட நிர்வாகமும் தங்களது சட்டப் பிரதிநிதிகளும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், குறித்த காணி ஏற்கனவே காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக 1990களிலேயே அது குறித்து தோட்ட நிர்வாகத் திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள் ளன. ஒரு ஜனநாயக நாட்டில் நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும். அதுவே சட்ட ஆட்சியின் அடிப்படையாகும். ஆனால் சட்டம் வெற்றி பெற்ற இடத்தில் மனிதாபிமானம் தோல்வியடையக் கூடாது.
சுமார் 35 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்த குடும்பங்கள் ஒரே நாளில் வீடிழந்து தவிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் பல அரசியல் தரப்புகளும் சமூக அமைப்புகளும் இந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகள், காணிகள் மற்றும் நிவாரணங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
பிரச்சினையின் ஆணி வேர்
இராகலை சம்பவம் தனிப்பட்ட வழக்கு அல்ல. இது பல தலைமுறைகளாக மலையக மக்கள் எதிர்கொண்டு வரும் நில உரிமை இல்லாத வாழ்க்கையின் வெளிப்பாடாகும். பல தொழிலாளர்கள் தலைமுறைகளாக தோட்டங்களில் வாழ்ந்தாலும், அவர்கள் வசிக்கும் காணிகளுக்கு சட்டபூர்வமான உரிமை இல்லை. அவர்கள் வீடுகளை கட்டியிருக்கலாம்.
மின்சாரம் பெற்றிருக்கலாம். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கலாம். வரி செலுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் வாழும் நிலத்தின் உரிமையாளர்கள் அல்ல. இதுவே எந்த நேரத்திலும் வெளியேற்றப்படக்கூடிய பாதுகாப்பற்ற வாழ்க்கையை உருவாக்குகிறது.இந்த விவகாரத்தில் பாதிக் கப்பட்ட குடும்பங்களில் ஒருவர் வணிகத்தில் ஈடுபட் டவர்; ஏனையோர் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்.
ஆனால் அவர்கள் தோட்ட நிர்வாகத்துடன் வழக்கமான முதலாளி – தொழிலாளி உறவில் இல்லாமல் வெளி வாரி முறைமை அல்லது தொழிலுக்கான ஒப்பந்த முறை யின் கீழ் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தொழிலாளர்களுக்கு முழுமையான தொழில் பாதுகாப்பு இல்லை. வீட்டு உரிமைக்கு சட்ட உத்தரவாதம் இல்லை. முதலாளியின் பொறுப்பும் குறைகிறது. தொழிலாளர்களின் வாழ்வுரிமையும் பலவீனமடைகிறது.
இது பெருந்தோட்டத் துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு அடிப்படை சட்டப் பிரச்சினையாகும். பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவு மற்றும் அரச சொத்துக்கள் மீட்புச் சட்டம் பல சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு தொழிலாளர் தனது வீட்டை சிறிதளவு புனரமைத்தால்கூட “அரச சொத்தை ஆக்கிரமித்தல்” என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலை உருவாகியிருப்பதாக பல தரப்பு கள் சுட்டிக்காட்டுகின்றன.
சட்டம் மக்களைப் பாதுகாக்க வேண்டுமே அன்றி, மக்களை அச்சுறுத்தும் கருவியாக மாறக் கூடாது. இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிப்பது என்ன வென்றால், தற்காலிக அரசியல் தலையீடுகள் நிரந்தரத் தீர்வல்ல. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் அல்லது தொழிற்சங்கங்கள் தொலைபேசி அழைப்புகள், பேச்சு வார்த்தைகள் அல்லது தற்காலிக ஏற்பாடுகள் மூலம் பிரச்சினைகளை சமாளித்திருக்கலாம். ஆனால் அவை எந்தவொரு குடும்பத்திற்கும் நிரந்தரமான நில உரிமையை வழங்கவில்லை. நில உரிமை என்பது சட்டத்தின் மூலம் மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும்.
நல்லாட்சி காலத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் கொள்கையை உருவாக்கியது. அதன் அடிப் படையில் இந்திய வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பின்னர் 10 பேர்ச் காணியுடன் கூடிய தனி வீட்டு திட்டமும், “ஆயிரம் காணி உறுதிகள்” வழங்கும் திட்டமும் உருவாக்கப்பட்டது. இந்த திட்டங்களுக்காக பெருந்தோட்ட வீடமைப்பு அமைச்சு, காணி சீர்திருத்த ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்களை ஒருங்கிணைத்த கொள்கை கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த முயற்சிகள் மலையக மக்களின் நிரந்தர நில உரிமைக்கான முக்கிய முன்னேற்றங்களாகக் கருதப் படுகின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு வெற்றி அளித்துள்ளன என்பது இதுவரையிலும் கேள்விக்குறி யாகவே உள்ளது. அந்த வகையில் தற்போதைய அரசாங் கம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த சில காணி உறுதி களை மக்களுக்கு வழங்கியிருந்தாலும், பல பகுதிக ளில் இன்னும் வழங்கப்படாத காணி உறுதிகள் உள்ளன. குறிப்பாக கண்டி மாவட்டத்தில் தயாராக இருந்த 210 காணி உறுதிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அதேவேளை ஹட்டன் பிரகடனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நில உரிமைச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வராததும் கவலைக்குரிய விடயமாகும். இந்நிலையில் உடனடியாக அரசாங்கம் சில செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மலையக மக்களும் மலையக தொழிற்சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அதன்படி வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட இராகலையைச் சேர்ந்த 6 குடும்பங்களுக்கு நிரந்தர மாற்று வீடுகள் வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்களுக்கான தேசிய நில உரிமைக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.
காணி உரிமை வழங்கும் திட்டங்கள் விரைவு படுத்தப்பட வேண்டும். நில உரிமை வழங்கப்படும் வரை தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை களுக்கு தற்காலிக சட்டத் தடை விதிக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரப் பயன்பாட்டில் வெளிப் படைத்தன்மை கொண்டுவரப்பட வேண்டும். பல ஆண்டு களாக நிலுவையில் உள்ள காணி உறுதிகள் அரசியல் பாரபட்சமின்றி மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் தற்போது வலுத்துள்ளன.
இராகலை சென்ட் லியோனார்ட்ஸ் சம்பவம் ஒரு நீதிமன்ற வழக்கின் முடிவு மட்டுமல்ல. அது மலையக மக்களின் நூற்றாண்டு கால நிலமற்ற வாழ்வின் பிரதி பலிப்பாகும். வீடுகள் கட்டிக்கொடுத்தால் மட்டும் போதாது. மின்சாரம் வழங்கினால் போதாது. நலத்திட்டங்கள் அறிவித் தாலும் போதாது. ஒரு சமூகத்திற்கு அதன் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவது “சட்டபூர்வமான காணி உரிமை” ஊடாக மட்டுமே முடியும். எனவே, இனிமேலும் இத்தகைய சம் பவங்கள் நிகழாமல் இருக்க அரசாங்கம், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூகங்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்கள் அனைவரும் இணைந்து மலையக மக்களுக்கான நிரந்தர காணி உரிமைச் சட் டத்தை உருவாக்க வேண்டும். மலையக மக்களின் சமூக நீதிக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும், தலைமுறை பாது காப்பிற்கும் காணி உரிமையே அடித்தளமாகும். அந்த உரிமை உறுதி செய்யப்படும் நாளே உண்மையான விடுதலை நாளாக அமையும்.