குட்டிமணி, தங்கத்துரையின் உருவச்சிலையை திறப்பதற்கு நீதிமன்றம் தடை

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் 43-வது நினைவு நாளை ஒட்டி எதிர்வரும் 25ஆம் திகதியன்று உருவச்சிலையை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் அந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான சதீஷ் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அத்துடன் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வழக்கு நேற்று (22) பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட பலர் பிரதிவாதி சார்பில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன்போது முன்வைக்கபட்ட கருத்துக்களை பரிசீலித்த பருத்தித்துறை நீதவான் அடுத்த மாதம் நான்காம் திகதி வரை குறித்த சிலை நிறுவுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான கட்டளையை பிறப்பித்திருந்தார்.