சமத்துவமாக மதித்தல் சகோதரத்துவமாக நடத்தல் சுதந்திரமாக கண்ணியத்தடன் பேசுதலே இறைமையைப் பேணும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 400

சனநாயகத்தின் தாய் எனப்படும் பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர்ப் பாராளுமன்றம் இரண்டு ஆண்டுகள் அதன் பிரதமராகத் திகழ்ந்த மதிப்புக்குரிய கியர்ஸ்டாமர் அவர்களின் இறுதியான பிரதமருக்கான கேள்வி நேரத்தை 15.07. 2026 மதியம் எதிர்கொண்டது. இந்த கேள்வி நேரத்தில் எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரைச் சமத்துவமாக மதித்து சகோதரத்துவமாக நடத்தி சுதந்திரமாக கண்ணியத்துடன் பேசி அன்பான பண்பான வழியனுப்பலைச் செய்தார்கள். இந்த வரலாற்று நிகழ்வு இறைமையைப் பேணுவதற்கு கட்சி நலன்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இந்த மூன்று பண்புகளும் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேவை என்பதை உலகிற்கு மீண்டும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்கள்  இதனை வரவேற்ற பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழ் த கார்டியன் தனது ஆசிரிய தலையங்கத்தை “கண்ணிய மான பிரியாவிடை – தேவையானவொன்று” என்று 16.07.2026 இல் தலையங்கமிட்டது.
இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் 22.05. 1972 அன்று சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசின் வழி அரசற்ற தேசஇனமாக்கப்பட்ட வரலாற்றின் பின்னர் ஈழத்தமிழர்களின்  தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை மீளுறுதிப்படுத்த ஈழத்தமிழர்களிடையான  தேசிய ஒருமைப்பாடே அதி முக்கிய தேவையாக உள்ளது. என்பதனை இலக்கு இவ்விடத்தில் ஈழத்தமிழர்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறது.  இதனை கவனத்தில் எடுக்காது ஈழத் தமிழர்கள் சிலர் ஒருவரை ஒருவர் சமுக ஊடகங்களில் அரசியல் நாகரிமற்ற முறையில் வார்த்தைகளால் கடித்துக் குதறி ஆதாரங்களற்ற தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தாயகத்தில் வாழ்ந்தாலும் உலகக் குடிகளாக எந்த நாட்டில் வாழ்ந்தாலும் “நான் சாகலாம் நீங்கள் சாகலாம் ஆனால் நாங்கள் சாகக் கூடாது” என்கின்ற ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்தின் மூலமந்திரமான “நாங்கள்” என்ற அன்புநிலையைச் சகோதரத்துவ நிலையைப் பேணுவதன் மூலமே ஈழத்தமிழர்களின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பி அரசற்ற தேசஇனத்தின் தேசநிர்மாணத்தை நடைமுறையில் முன்னெடுத்து அதன் இறைமையை மீளுறுதி செய்ய முடியும் என்பதை இலக்கு மீள்நினைவுறுத்த விரும்புகிறது.
மேலும்  பிரித்தானியப் பிரதமர்  அவர்களுக்கு அளிக்கப்பட்ட கண்ணியமான பிரியாவிடையில் எவ் வாறு பிரதான எதிர்க்கட்சியான கொன்சேர்வேடிவ் கட்சியின் தலைவி கெமி பாட்நொக் அவர்களும் மற்றைய கட்சித் தலைவர்களும் பிரதமர் கியர் ஸ்டாமர்  சிறுவர்களுக்கும் பெண்களுக்கும்  அவர்களின் உரிமைகளை நலன்களைப் பேணுவதற்குச் செய்த செய்ய முயன்றவற்றை அழகாக எடுத்துரைத்து தங்களின் இதய நன்றியை வெளிப்படுத்தினர் பிரதமரும் தனது உரையில் “ நான் சரிந்து போன பிரித்தானியப் பொருளாதாரத்தை வளர்க்க நெம்புகோலாக முயற்சித்தேன்” என்றே தனது  உரையைத் தொடங்கி அவரது காலத்து மக்கள் நல செயற்பாடுகளை எடுத்துரைத்தார். ஆயினும் லேபர்கட்சி பொருளாதாரத்தை வளர்த்தல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை நிலைப்படுத்த இயலாது போனமை ஸ்டாமர் நைஜில் பராக்கின் கையில் 10 டவுணிங் ஸ்ரீட்டின் திறப்பைக் கொடுத்து விடுவாரோ என்கிற அச்சத்தை லேபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடை தோற்றுவித்தமையே மக்களுக்குச் சமுக பொருளாதார மாற்றத்தை விரைவாகத் தரக்கூடிய புதிய பிரதமராக மதிப்புக்குரிய அன்ரிபேனம் அவர்களை 384 பிரித்தானிய லேபர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி யூலை 20ம் திகதி 10 டவுணிங் ஸ்ரீட்டுக்கு அனுப்பி வைக்கும் வரலாற்றுப் பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு பெரும்பான்மை இருந்தாலும் மக்களின் தேவைகளை பிரச்சினைகளை அணுகி அதற்குரிய வகையில் தீர்வு காணப்பெறாவிட்டால் ஆட்சியில் தொடர இயலாது புதிய தலைமையை உருவாக்கும் என்ற உண்மையை ஸ்டாமரின் வெளியேற்றம் ஈழத்தமிழர்களுக்கு எடுத்துரைக்கிறது என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
அதே நேரத்தில் பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்ரர் பாராளுமன்றத்தின் 2வது சபையான பிரபுக்கள் சபை யினை ஸ்டாமரால் நீக்க முடியாத நிலை தொடர்ந்த நிலையில் “ பிரதேசங்களினதும் தேசஇனங்களதும் செனட் டாக” (Senate of regions and nations)  ஆக மாற்றக்கூடிய வகையில் பிரதமர் ஸ்டாமர் இலண்டன் மேயர் மதிப்புக்குரிய சாதிக் கான் மற்றும் சிறுவர் வறுமை நீக்க அமைப்பின் செயற்பாட்டாளர் அலிசன் லோவ் முன்னாள் உணவுத் தரப்படுத்தல் முகவரகத்தின் தலைமை இயக்குனர் டிம் யே சிமித் போன்ற 26 உறுப்பினர்களை பிரபுக்கள் சபைக்கு நியமித்து விடைபெறுகின்றார்.   ஒருவர் தமது பதவி நிலையில் நின்று விடுபடும் நிலையிலும் நாட்டிற்கும் மக்களுக் கும் உரிய பங்களிப்பைக் கடைசி நிமிடம் வரை வழங்கிட  வேண்டுமென்ற இந்த முன்மாதிரிகை ஈழத்தமிழர்களின் பிரதேசங்களினதும் தேசஇனங்களிதும் பேரவை ஒன்றை உலகளாவிய நிலையில் ஈழத்தமிழரின் நாளாந்தப் பிரச்சினைகளை அணுக அழைக்க வேண்டிய தேவையையும் உணர்த்துகின்றது.  ஸ்டாமரின் பிரியாவிடை வெளிப்படுத்தும் பண்புகளை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல சமுக ஊடகவியலாளர்களும்  மனதிருத்தி தங்கள் பணிகளை கட்சி சார்புகளைக் கடந்து விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடாது செய்திட முன்னெடுக்க வேண்டும் என்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது.
மேலும் மதிப்புக்குரிய பிரதமர் கியர் ஸ்டாமர் அவர்களின் உக்ரேனின் பாதுகாப்புக்காக நிதிமதி மற்றும் நவீன ஆயுத வழங்கலுக்காக பிரான்சிய அரசத்தலைவர் மதிப்புக்குரிய மக்ரோனுடன் இணைந்து உருவாக்கிய  “விருப்ப அடிப்படை அரசியல் கூட்டு” (Coalition of the Willing) நாடுகள் தங்களின் வேறுபாடுகளுக்கு இடையில் குறித்த ஒரு விடயத்தில் கூட்டாகச் செயற்படல் என்பது புதிய அரசியல் முறைமையொன்றை உருவாக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நிலையிலும் பிரித்தானியா தனது பங்களிப்பை ஐரோப்பியப் பாதுகாப்புக்குச் செய்யத்தக்க முறைமையைத் தோற்றுவித்தது. இதற்காகப் பிரியாவிடை பெறும் மதிப்புக்குரிய பிரதமர் கியர் ஸ்டார்மர் அவர்களுக்கு பிரான்சு அதனது வரலாற்றில் முதல்தடவையாக அதன் மீயுயர் விருதான “லீயூன் துநோர்” (Legion d’hnonneur) விருதினை வழங்கி மதிப்பளித்துள்ளது. அவ்வாறே உக்ரேன் அதனது மீயுயர் விருதான “ஓடர் ஒவ் த பிரீடம்” (Order of the Freedom) விருதை மதிப்புக்குரிய பிரதமர் கியர் ஸ்டாமர் அவர்களுக்கு அவர் பிரித்தானியப் பிரதமராக விளங்கும் பொழுதே அளித்து மதிப்பளித்துள்ளது. ஈழத்தமிழர்களும் அவர்கள் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளுடன் சனநாயகத்தின் வழி பயணிக்கின்ற இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் தாயகத்துக்கும் மக்களுக்குமான பாதுகாப்புடன் கூடிய அமைதியை வளர்ச்சிகளை முன்னெடுக்கக் கூடிய விருப்புக்களில் கூட்டாகச் செயற்பட்டு தங்களின் கட்சி மற்றும் அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்குச் சத்தியளித்தல் காலத்தின் தேவையாக உள்ளது.
மேலும் தேசிய விழிப்புணர்ச்சி தோன்றிய மக்களிடை அதனை அணைத்திட முடியாது என்பதற்கு உதார ணமாக இங்கிலாந்துக்கும் ஆஜன்ரீனாவுக்கும் இடையிலான உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் ஆஜன்ரீனா குழுவில் “ போக்லாந்தினர் ஆர்ஜன்டீனாவினரே” என்ற பதாகை வெற்றிக் களிப்புக்கு மத்தியில் உயர்த்தப்பட்டமை போர்க்லாந்துடன் மார்கிரெட் தச்சர் 1982 இல் போர் தொடுத்து அதனைத் தொடர்ந்தும் பிரித்தானியாவின் கடல் கடந்த எல்லைநிலமாக பிரித்தானியப் படைத்தளமாக நிறுவி 44 ஆண்டுகள் சென்றாலும் ஆர்ஜன்டினர்களுக்கு அது தங்களின் மண் என்கின்ற தேசிய விழிப்புணர்வு இன்றும் நீறு பூத்த நெருப்பாக உள்ளது.
அதே போல் 1983 இல் சிறிலங்கா ஈழத்தமிழின அழிப்பாக ஆடி இனஅழிப்பை நடாத்தி 43 ஆண்டுகள் சென்றாலும் இன்றும் ஈழத்தமிழர்கள் அதற்கான அனைத்துலக நீதியை கோரியவர்களாகவே இந்த 2026 யூலை மாதத்தையும் கறுப்பு யூலையாகவே முன்னெடுத்து 23 முதல் 25 வரை தாயகத்திலும் ஈழத்தமிழர்கள் புலம்பதிந்து வாழும் நாடுகளிலும் நீதிக்கான குரலை ஒருதேசமாக எழுப்புவதற்கு தம்மால் இயன்றளவுக்கு முயற்சித்து வருகின்றனர்.
ஆயினும் 1983 முதல் இன்று வரை ஈழத்தமிழின அழிப்பை தனது அரசியல் கொள்கையாகவும் ஈழத்தமிழர் உட்கட்டுமானச்சிதைப்பை தனது அரசியற்கோட்பாடாகவும் 43 ஆண்டுகளாகத் தொடரும் அரச பயங்கரவாதத்தின் ஊற்றான சிறிலங்காவை சனநாயக நாடாகவும் தங்களின் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் சிறிலங்காவின் படைகளின் இனங்காணக்கூடிய அச்சத்தில் இருந்து பாதுகாக்க அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவாகப் போராடிய போராடும் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகள் எனவும் உலக அரசியல் வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகள் சட்டப்பிரகடனங்கள் செய்து ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் வெளியகத்தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி உலக நாடுகளதும் உலக அமைப்புக்களதும் அனைத்துலக சட்டப் பாதுகாப்பை தமது வரலாற்றுத் தாயகத்தில் தாம் பாதுகாப்புடன் கூடிய அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும்  பெற இயலாதவாறு செய்து வருகின்றன. எனவே இந்த யூலை மாதத்தை ஈழத்தமிழர் தமது மரபுரிமை மாதமாகத் தாம் வாழும் நாடுகளில் மாற்றி தம்முடைய அரசுகளுக்கும் தம்மோடு வாழும் மக்களுக்கும் பயங்கரவாதிகள் எனத் தமிழரை வகைப்படுத்திய நிலையினை மாற்றுவதற்குக் குரலெழுப்ப வேண்டிய மாதமாக இம்மாதம் உள்ளது. இதற்கு 1983 முதல் இன்று வரை இந்தப் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என்ற சொல்லாட்சிகள் வழி ஈழத்தமிழர்கள் தாங்கள் தாயகத்திலும் புலம்பதிந்து வாழும் நாடுகளிலும் எவ்வாறு பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற பதிவுகளைச் சான்றாதரங்களுடன் ஆவணப்படுத்த வேண்டும். இதுவே இந்த 1983 யூலை சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்புக்கான அனைத்துலக நீதியைப் பெறுவதற்கான இன்றைய தலையாய தேவையாக உள்ளது என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவும் அழைப்பாகவும் உள்ளது.
ஆசிரியர்

Tamil News