மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில காலங்களாகத் தீவிபத்துகள்: காரணம் என்ன?! : மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில காலங்களாக தீவிபத்துகள் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.அண்மையில் மட்டக்களப்பு நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்திருந்த நிலையில் வாரத்திற்கு ஒரு தீச்சம்பவம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவருவதை காணமுடிகின்றது.
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மையங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாநகரப் பகுதி திகழ்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சனத்தொகை, நகரமயமாக்கல் மற்றும் புதிய வணிக நிறுவனங்களின் வருகை காரணமாக மட்டக்களப்பு நகரின் பொருளாதார நடவடிக்கைகள் வேகமாக விரிவ டைந்து வருகின்றன. இத்தகையதொரு சூழலில், நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் தீ பாதுகாப்பு முறைகளுடன் (Fire Safety Systems) அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக மாறியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை என்பது இலங்கை யில் உள்ள மாநகரசபையில் மிகப்பழமையான மாநகர சபையாகவும் அதிகளவான இயற்கை அழகையும் வனப்பு களையும் கொண்ட பகுதி என்பதுடன் அதிகளவு வியாபரம் ஈட்டும் சபையாக இருந்துவருகின்றது.மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 3500க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு பல்வேறு வழிகளி லும் வருமானம் ஈட்டும் ஒரு பகுதியாக வர்த்தக நிலையங்கள் அமைகின்றது.இந்த வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி யளிக்கும்போது மாநகரசபையானது பல்வேறுபட்ட விடயங்களை கருத்தில்கொண்டே அனுமதிகள் வழங்கப் படுகின்றபோதிலும் கடந்த காலத்தில் இருந்த அரசியல் செல்வாக்குகள் மற்றும் இலஞ்ச,ஊழல் நிறைந்த நிர்வாக அலகுகள் காரணமாக இந்த அனுமதிகள் முறையற்ற வகையிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மட்டக்களப்பு நகரின் பிரதான வீதி, பஜார் வீதி போன்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் நெருக்கமாகவும், பழமையான கட்டட அமைப்புகளுடனும் காணப்படுகின்றன. முறையற்ற மின்சார இணைப்புக்கள், தரமற்ற மின்சார உபகரணங்களின் பயன்பாடு, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் குவித்து வைத்தல் மற்றும் போதிய காற்றோட்ட வசதியின்மை போன்ற காரணங்களால் தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இங்கு அதிகமாக உள்ளது.
இப்பகுதியில் ஏதேனும் ஒரு கடையில் ஏற்படும் சிறு தீப்பொறி கூட, அருகில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் மிக வேகமாகப் பரவி, ஒட்டுமொத்த நகரையே முடக்கும் அளவிற்கான பாரிய பொருளாதார இழப்புகளையும் உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தக்கூடும்.
வர்த்தக நிலையங்களை தீ பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய திட்டமிட்டு அமைப்பது பின்வரும் காரணங் களுக்காக அவசியமாகிறது:
உயிர்ப் பாதுகாப்பு: கடைகளுக்கு வரும் வாடிக்கை யாளர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதே முதன்மையான நோக்கமாகும்.
பொருளாதாரப் பாதுகாப்பு: தீ விபத்துக்களால் வர்த்தகர்களின் வாழ்வாதாரம், பல மில்லியன் பெறுமதி யான பொருட்கள் மற்றும் கட்டடங்கள் முற்றாக அழிந்து போவதைத் தடுக்க முடியும்.
அவசரகால மீட்புப்பணி எளிமை:
தீ பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், விபத்து ஏற்படும் போது தீயணைப்புப் படையினர் விரைவாகச் செயற்பட வழியமைக்கும். கட்டடங்கள் அமைக்கப்படும் போதே முறையான பாதுகாப்பு வரைபடங்களின்படி அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நிலையத்திலும் அவசர காலத்தில் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கென பிரத்தியேகமான அவசரக் கதவுகள் அமைக்கப்பட வேண்டும். இந்த வழிகள் எப்போதும் எவ்வித தடைகளுமின்றி திறந்த நிலையில் இருக்க வேண்டும் மற்றும் அவசர வழி என்பதைக் குறிக்கும் ஒளிரும் சுட்டிகள் பொருத்தப்பட வேண்டும்.
கட்டடத்தின் பரப்பளவு மற்றும் அங்குள்ள பொருட்க ளின் தன்மைக்கு ஏற்ப, போதிய எண்ணிக்கையிலான தீயணைப்பு உருளைகள் எளிதில் அணுகக்கூடிய இடங்க ளில் பொருத்தப்பட வேண்டும். மேலும், அவற்றை முறை யாகப் பராமரிப்பதோடு, ஊழியர்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.தீ பரவத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்திலேயே புகை மற்றும் வெப்பத்தை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் தானியங்கி அலாரங்கள் பொருத்தப்படுவது அவசியமாகும். இது பெரிய ஆபத்துக்களை முன்கூட்டியே தவிர்க்க உதவும்.அங்கீகரிக்கப்பட்ட மின் பொறியியலாளர்களைக் கொண்டு, தரமான வயர்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி மின் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். சுமை அதிகரிப்பு மற்றும் மின்சுற்றுத் துண்டிப்பு ஏற்படுவதைத்
தடுக்கும் நவீன பாதுகாப்பு சாதனங்கள் பொருத் தப்பட வேண்டும். மட்டக்களப்பு நகரில் பெரும்பாலான இலத்திரனியல் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங் களிலும் இலத்திரனியல் பொருட்கள் திருத்தும் கடைகளிலும் முறையான தீயணைப்பு வசதிகளோ ஒரு தீ விபத்து ஏற்படும்போது அதனை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வசதிகளோ இல்லாத நிலையிலேயே இந்த கட்டடங்களும் விற்பனை நிலையங்களும் காணப்படுகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபையானது புதிய வர்த்தகக் கட்டடங்களுக்கான அனுமதியை வழங்கும் போது, தீய ணைப்புத் திணைக்களத்தின் பரிந்துரைகளையும் சான்றிதழ்களையும் கட்டாயமாக்க வேண்டும். தற்போது இயங்கி வரும் பழைய கட்டடங்களையும் அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்தி, போதிய தீ பாதுகாப்பு வசதிகள் இல்லாத கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
வர்த்தகர்களும் தங்களின் சுய லாபத்தை மட்டும் கருதாது, தங்களது சொத்துக்களினதும், சமூகத்தினதும் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மாநகரசபையின் தீ பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற முன் வர வேண்டும்.
மட்டக்களப்பு மாநகரசபையானது இந்த தீவிபத்து களை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன் னெடுத்துவருகின்றது.எவ்வாறான நடவடிக்கைகள் முன் னெடுத்தாலும் வர்த்தகர்களின் ஒத்துழைப்பும் அவர்களின் செயற்பாடுகளுமே முறையான பாதுகாப்பினை மட்டக் களப்பு மாநகரசபைக்கு வழங்கும்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஒரு தீயானது மிகபாரதூரமானதாக ஏற்பட்டால் அது முழு நகரினையும் அழிக்கும் நிலைக்கு செல்லும் நிலையே காணப்படுகின்றது.இதன் அபாயத்தன்மையினை உணரவேண்டும் என மாநகரசபையினால் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டா யமாக பொருத்தப்படவேண்டும்.அவ்வாறு இல்லாத வர்த்தக நிலையங்களுக்கான வியாபார பதிவுகளை எதிர்வரும் ஆண்டுகளில் வழங்கப்போதில்லையென மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் அண்மை யில் தெரிவித்திருந்தார்.
தீயணைப்பு கருவியை பொருத்தி இருக்கின்ற போது, உடனடியாக ஒரு தீ ஒன்று ஏற்படும் போது உடனடியாக நீங்கள் செயற்பட்டு அதனை அணைத்து முதல் நடவடிக்கையை நீங்கள் செய்து கொண்டு வருகிற நேரம் மாநகர சபையிலிருந்து எங்களுக்கு கிடைத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய ஐந்து தொடக்கம் 10 நிமிடத்திற்குள் எமது அந்த தீயணைப்பு பிரிவினர் அங்கே வந்து சேர்ந்து தொடர்ந்து அந்த தீயணைப்பை மேற்கொள்வதற்கு அது இலகுவாக இருக்கும்.
இல்லாவிடின் அந்த தீயணைப்பு மிகவும் பெரிதாகப் பரவி மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கும். ஆகவே அதனைத் தடுக்கும் முகமாகத் தான் நாங்கள் அந்த தீயணைப்பு கருவியை கட்டாயம் நீங்கள் உங்களது ஒவ்வொரு கடைகளிலும் பொருத்த வேண்டும் என்கின்றதை நாங்கள் ஒரு கட்டளையாக உங்களுக்கு நாங்கள் வழங்குகின்றோம் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த அறிவுறுத்தல்களை யார் இதுவரை யில் பின்பற்றியுள்ளார்கள் என்று பார்த்தால் இதுவரையில் யாரும் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை.இந்த தீவிபத்து சம்பவங்களின்போது பொதுமக்களும் தமது கடமையினை சிறப்பாக முன்னெடுக்கவேண்டும்.
பொதுமக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும்போது அவசரகால வழிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் பதற்றமடையாமல், உடனடியாக தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்குவதுடன், மீட்புப் பணிகளுக்குத் தடையாக இருக்காமல் ஒத்துழைக்க வேண்டும்.
“வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கு ஏற்ப, தீ விபத்துக்கள் ஏற்பட்ட பின் வருந்துவதை விட, அவை ஏற்படா வண்ணம் தடுப்பதே புத்திசாலித்தனமாகும். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வர்த்தகப் பகுதிகளைப் பாதுகாப்பானதாக மாற்றுவது வர்த்தகர்கள், அரச அதி காரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கூட்டுப் பொறுப்பாகும். நாம் அனைவரும் நமது சமூகக் கடமையை உணர்ந்து செயலாற்றினால், மட்டக்களப்பின் பொருளாதார மையங்களைப் பாதுகாப்பதுடன், பெறுமதிமிக்க மனித உயிர்களையும் காக்க முடியும்.