இறையாண்மை அதிகாரப் பகிர்வே அரசியல் முரண்பாடுகளில் நல்லிணக்கத்துக்கு ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 399

இன்றைய உலகில் ஆழத்தாக்கும் வான்வழி தன்னியக்க போர்க்கருவிகள் வழியாக நாடுகளின் பாதுகாப்புப் பலமும் அரசுக்களின் கூட்டாண்மை பங்காண்மைப் பொருளாதாரம் வழியாக அரசுக்களின் நிதிப்பலமும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதனால் தாராண்மைவாத சனநாயகம் நாடுகளுக்கான சிறந்த ஆட்சித்தத்துவம் என்ற 20ம் நூற்றாண்டு அரசியல் மாறுபட்டுள்ளது. இதன் விளைவாக தேச அரசுக்கள் (Nation States) பொதுநன்மையை (Common Goods) மைய நோக்காகக் கொண்டு செயற்படுதலில் இருந்து அரசுக்கள் விடைபெற்று சக்தி அரசுக்களாக (Power States) அரசுக்கள் தங்களைக் கட்டமைப்பதையே தங்களின் மைய நோக்காகக் கொண்டு விளங்குகின்றன.
1989 இல் பேளின் சுவர் இடிக்கப்பட்டதுடன் அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் இருந்த பனிப்போர் முடிவடைந்து 1991 அளவில் அமெரிக்கா உலகின் அதிசக்தி (Super Power) நாடாக உலகில் மேலேழுந்தது. இந்த அரசியல் முனைவாக்கம் காரணமாக பிரித்தானியா போன்ற உலகின் முன்னைய வல்லரசுக்கள் கூட மத்திய சக்தி (Middle power) நாடுகளாக மாறத்தொடங்கின. இன்று நேற்றைய வல்லரசான பிரித்தானியா மீளவும் கனடா யப்பான் போன்ற மத்திய சக்தி நாடுகளுடன் இணைந்தே மீளவும் வல்லாண்மையாக மேலெழவேண்டும் என்கின்ற கருத்துப் பலமாக உள்ளது. இதனை எதற்காக எழுதுகிறேன் என்றால் மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப எவரும் தங்களை மாற்றியமைத்தே மீளவும் முன்னைய நிலைக்கு மீள முடியும் என்கிற அரசியல் எதார்த்தத்தை ஈழத்தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசற்ற தேசஇனமாகவுள்ள ஈழத்தமிழர்களால் அரசுக்களுடன் கூட்டாண்மை பங்காண்மைகளுக்குச் சென்று சமகால கூட்டாண்மை பங்காண்மை அரசியலை எதிர்கொள்ள இயலாது என்பதால் ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவாக உள்ள தமிழகத் தமிழர்களின் அரசியல் தலைவர்களின் கூட்டாண்மை பங்காண்மை வழியாகவே இன்றைய உலகின் கூட்டாண்மை பங்காண்மை அரசியலில் நுழைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதுவே தமிழ் தேசிய மக்கள் பேரவையினர் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில்  தமிழக விடுதலைச் சிறுத்தைகளின் தமிழக சட்டசபை உறுப்பினர் அமைச்சர் வன்னியரசின் துணையுடன் தமிழக முதல்வர் யோசப் விஜயையும் பின்னர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் மற்றைய தமிழக அரசியல் தலைவர்களையும் சந்தித்து சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டியை ஈழத்தமிழர்கள் பெற சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுள்ளனர். இதனை இலக்கு சமகாலத்திற்கு ஏற்ற அணுகுமுறையெனக் கருதுகிறது. தமிழரசுக்கட்சியின் சிறிதரனும் இளைய தம்பி சிறிகாந்தும் கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டசபை உறுப்பினரைச் சந்தித்துள்ளனர். இந்தியாவின் மற்றைய தென்னிந்திய மாநிலங்களையும் மட்டுமல்ல  வடமாநிலங்களையும் சந்தித்து ஈழத்தமிழர் தேசிய பிரச்சினைக்கு இந்தியாவின் இன்றைய நிலைப்பாட்டைத் தெளிவாக்க வேண்டிய நேரமிது என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
மேலும் அமெரிக்கா உலகின் அதிசக்தி படைத்த நாடாக எழுந்த 1991  காலகட்டத்தில்தான் 1991ம் ஆண்டின் இராணுவத் தந்திரோபாய அறிக்கை இலங்கைத் தீவில் இருநாடுகள் என்ற நிலை காணப்படுகிறது. ஒன்று சிறிலங்கா மற்றது தமிழீழம். கொழும்பு இதனை ஏற்குமா அல்லது ஒடுக்குமா? ஏன்ற கேள்வியை எழுப்பியிருந்தது. சிறிலங்கா இந்தக் கேள்வியின் பொருளைப் புரிந்து கொண்டு அமெரிக்க நலன்பேணும் அரசாகத் தன்னை முன்னிலைப்படுத்தி அமெரிக்காவை ஈழத்தமிழரின் மண்மீட்புப் போருக்குத் தலைமைதாங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் எனப்பட்டியலிட வைத்து தனது ஈழத்தமிழின அழிப்பை சிறிலங்காவின் இறைமையையும் ஒருமைப் பாட்டையும் பாதுகாக்கும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கையென உலகின் முன் தனது வல்லாண்மை மேலாண்மை நாடுகளுடனான நட்பின் மூலம் நிறுவிக்கொண்டது. இதுவே இன்று வரை ஈழத்தமிழர்களால் ஈழத்தமிழர்களுக்குச் சாதகமான எதனையும் அனைத்துலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கான பெருந்தடையாகவுள்ளது. எனவே இந்நிலையில் தமிழகத்தின் கூட்டாண்மை பங்காண்மை இந்நிலையை மாற்றுவதற்கான புதிய வழிகளைத் திறக்கும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் நாள் யப்பானின் கிரோஷிமா (Hiroshima) மேல் சின்னபையன் என்ற குறியீட்டுப்  பெயர் கொண்ட ஐதரசன் அணுக்குண்டை வீசி 75000 முதல் 100000 வரையான யப்பானியர்களையும் மூன்று நாட்களுக்குப் பின்னர் யப்பானின் நாகசாகி (Nagasaki) மீது பருத்த பையன் என்ற ஐதரசன் அணுக்குண்டை வீசி மீளவும் பெரு மளவிலான யப்பானியர்களையும் தேசமாகவே கொன்று குவித்து 1941இல் ஹவாயின் பேள் காபரில் அமெரிக்கக் கப்பலை யப்பானியர் தற்கொடைத் தாக்குதல் மூலம் அமெரிக்கா மேலும் பிரித்தானியா மேலும் தொடங்கிய போரை முடித்து வைத்தது. 1945 மார்ச் மாதத்தில் யப்பானில் டோக்கியோ மீது குண்டு வீசி 83000 பேரைக் கொன்ற நிலையிலும் யப்பானியர் தொடர்ந்தும் உறுதியுடன் போராடிய நேரத்திலேயே கிரோஷிமா மீது அணுக்குண்டை வீசி மக்களைத் திரளாக குண்டு வீசி கொல்லும் போர் முறைமையையும் உட்கட்டுமானங்களை ஒரேயடியாக அழிக்கும் முறைமையையும் உலகில்   அமெரிக்கா தோற்றுவித்தது. யப்பான் சரணடையும் பொழுது அதன் அரசராக இருந்த கிரோ கிட்டோ “எதிரி கொரூரமான குண்டுகளை போடத் தொடங்கி விட்டான். ஆகவே எதிர்கால தலைமுறைகளின் நலன் கருதி யப்பான் சரணடைய வேண்டும்.” என கூறிச் சரணடைந்த போதிலும் எந்த அமெரிக்கா யப்பானை அழிக்க நினைத்ததோ அதே அமெரிக்காவின் துணையுடனேயே இன்று உலகின் மத்திய சக்தி நாடாகத் திகழ்கிறது. இதுதான் ராஜதந்திர வெற்றியென்பது.
சிறிலங்காவுக்கு ஈழத்தமிழர்களைத் தேசமாகவே 146000 பேரை முள்ளிவாய்க்காலில் மே 2009 இல் இனப் படுகொலை செய்வதற்கும் ஈழத்தமிழர்களின் உட்கட்டுமானங்களை அடியோடு அழிப்பதற்கும் அமெரிக்காவின் யப்பான் மேலான குண்டு வீச்சுச் செயல் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கலாம். இந்நிலையில் இன்று 17 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க பிரித்தானிய சுவிஸ் நோர்வே யேர்மனிய கூட்டு முயற்சிகள் வழி தேசிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பில் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு (Tamil National Question)  சிறிலங்காவின் ஒற்றையாட்சியுள் அதிகாரபரவலாக்கத்தை ஏற்படுத்தித் தீர்வு காணவைக்க ஈழத்தமிழர்களே முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி” என்கிற இறையாண்மைப் பரவலாக்கத்தை அதிகாரப் பரவலாக்கலுக்கு மாற்றுத் தீர்வாக முன்னெடுப்பது வரவேற்கப்பட வேண்டியவொன்று என்பது இலக்கின் எண்ணம்.
நோர்வேயின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்காவுக்கும் பேச்சுவார்த்தை நடந்த வேளையில் கனேடியக் கூட்டாட்சி நிபுணர்களுடன் நடாத்திய கலந்துரையாடலின் அடிப்படையில் பின்பு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் சட்டமுனைவர் ஜி எல் பீரிஸ் அவர்களும் இணைந்து கீழ் கண்ட தீர்மானத்தை வரைந்தனர்.
“விடுதலைப்புலிகளின் தலைமை தெரிவித்த ஒரு யோசனைக்கு இசைவாக உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் ஐக்கியமான இலங்கைக்குள் சமஸ்டி ஆட்சிமுறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது” என்பதே அந்தத் தீர்மானம்.
இவ்விடத்தில் இந்த முயற்சி சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்குப் பாதகமானதில்லையென்பதை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விளக்கும் பொழுதே “இறையாண்மை அதிகாரப் பகிர்வே இந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி என்பதனைத் தெளிவுபடுத்தி இதுவரை சிங்கள அரசியல்வாதிகள் அதிகார பரவலாக் கத்தையே சமஸ்டியெனப் பேசியுள்ளனவே தவிர இறையாண்மை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள சிந்திக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
எனவே இன்று இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பது குறித்துப் பேசப்படுகின்ற நேரத்தில் பாலா அண்ணனின் வழியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தமிழ் தேசிய மக்கள் பேரவையினர் முன் எடுக்கும் இந்த முயற்சிக்கு தமிழகத் தமிழர்களும் அனைத்துலகிலும் உள்ள புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களும் துணைசெய்து  சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்காவுக்கு இறையாண்மை அதிகாரப் பகிர்வே  அரசியல் முரண்பாடுகளில் நல்லிணக்கத்துக்கு ஒரே வழி என்பதனை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணம்.

Tamil News