யுத்தக் காலத்தில் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நகைகள் மற்றும் உகண்டா முதலீட்டு விவகாரம்: சிறீதரன் சபையில் கேள்வி

இறுதி யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் இயங்கிய தமிழீழ வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் உடனடியாக முறையான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ‘பணச்சலவை’ சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கடந்த காலத்தின் மிக முக்கியமான இந்த விவகாரத்தை அவர் சபையில் பகிரங்கமாகக் கிளப்பினார்.

பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யுத்தக் காலத்தில் வன்னிப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள், தங்களது வாழ்வாதார விவசாயத் தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் உயர் கல்விக்காகவும் தமிழீழ வைப்பகங்களில் பெருமளவிலான தங்களது பாரம்பரியத் தங்க நகைகளை அடகு வைத்திருந்தனர்.

மக்களின் வியர்வையிலும் உழைப்பிலும் சேர்ந்த பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அவை” எனக் குறிப்பிட்டார். இறுதி யுத்தத்தின் போது இந்த நகைகளுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்துப் பேசிய அவர், முன்னாள் இராணுவத் தளபதியின் கூற்றைச் சான்றாக முன்வைத்தார்.

யுத்தத்தின் இறுதி நாட்களில், இந்தத் தங்க நகைகள் அடங்கிய பெரும் கொள்கலன்களை, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரில் இராணுவத்தினர் தங்களது பொறுப்பில் எடுத்திருந்தனர். இந்த உண்மையை முன்னாள் இராணுவத் தளபதியான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பலமுறை பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார்” என்றும் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கக் குவியல்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டன? அவை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன? என்ற கேள்விகளை எழுப்பிய அவர், “இந்த நகைகள் அனைத்தும் உருக்கப்பட்டு உகண்டா போன்ற வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதா?” என்ற பலத்த சந்தேகத்தையும் பாராளுமன்ற விவாதத்தின் போது எழுப்பினார்.

பணச்சலவை சட்டம் குறித்துப் பேசும் இந்த அரசாங்கம், தமிழ் மக்களின் பில்லியன் கணக்கான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கறுப்புப் பணமாக மாற்றப்பட்டதா? என்பது குறித்துப் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்