மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
விமல் வீரவங்சவினால் வெளியிடப்பட்ட “நெத்த வெனுவட்ட எத்த” (Natha Venuwata Atha) என்ற புத்தகத்தில், தாம் ஜேவிபியில் பணியாற்றிய காலத்தில் அதன் செயற்குழுவிடம் சமர்ப்பித்த கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ரகசிய ஆவணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ரில்வின் சில்வா கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இது தனது தனிப்பட்ட மற்றும் கட்சியின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் செயல் என அவர் வாதிட்டிருந்தார்.
இந்த வழக்கை நீண்டகாலமாக விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம், கடந்த 2019 ஜனவரி 11 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
அதில், அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின்படி குறித்த நூலில் உள்ள பொருள்களின் முறையான உரிமை விமல் வீரவங்சவுக்கு அல்ல, மாறாக ரில்வின் சில்வாவுக்கே சொந்தமானது என்று கூறி, 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து விமல் வீரவங்ச உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.
எனினும், மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா, வர்த்தக மேல் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை முழுமையாக உறுதி செய்து உத்தரவிட்டார்.
அத்துடன், சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகத்தை அச்சிடவோ, விநியோகிக்கவோ, விற்கவோ அல்லது வேறு எந்தச் செயலிலும் ஈடுபடவோ கூடாது என விமல் வீரவங்சவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



