நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் சேதங்களை அடுத்து, கைதிகளின் பாதுகாப்பு மற்றும் இட நெருக்கடியைக் கருத்திற்கொண்டு பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகம் மற்றும் மஹர சிறைச்சாலை வளாகம் ஆகியன தற்காலிக சிறைச்சாலைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சிறைச்சாலை வளாகம் கடுமையாக சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த வளாகம் குற்றப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டதால், கைதிகளை அங்கு தடுத்து வைப்பது பொருத்தமற்றது என நீதி அமைச்சு அறிவித்தது.
விசாரணைகளைத் துரிதப்படுத்தவும், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அங்குள்ள பெரும்பாலான கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டனர். இதனால் ஏற்பட்ட இட நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானியின்படி, பழைய போகம்பறை சிறைச்சாலையின் அதிகார வரம்பு முழு இலங்கையையும் உள்ளடக்கியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பழைய போகம்பறை சிறைச்சாலையை அருங்காட்சியகம் அல்லது சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டின் தற்போதைய சிறைச்சாலைத் தேவைக்கேற்ப அது மீண்டும் முழுமையான சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி, மஹமோதரவிலும் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சர் அண்மையில் வர்த்தமானி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



