2030ஆம் ஆண்டளவில் 2.5 பில்லியன் டொலர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தையும், 400 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தியையும் இலக்காகக் கொண்டு, இலங்கையின் சிறு தோட்டத் தேயிலைத் துறையை வலுப்படுத்தும் நோக்குடன் ‘சிலோன் தேயிலைக் கிராமம் (சிலோன் டீ வில்லேஜ்)’ திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை தேயிலை சபை மற்றும் தேசிய பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் மூலம் பசுந்தேயிலை (கொழுந்து) விளைச்சலை அதிகரித்தல் மற்றும் சிறு தோட்ட உரிமையாளர்களின் வருமானத்தை மேம்படுத்தல், மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தேயிலை பயிர்ச்செய்கையை சுற்றுலாவோடு ஒருங்கிணைத்தல், நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலை வளர்க்கும் கிராமங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுதல் ஆகிய இலக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இவ்வாண்டில் 147 தேயிலை கிராமங்கள் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளின் மூலமே இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
‘சிலோன் தேயிலைக் கிராமம்’ திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் முதற்கட்டம் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய 147 தேயிலை கிராமங்களில் செயற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தேயிலை உற்பத்தியின் தரமும் அளவும் மேம்படுவதோடு, சிறு தோட்டத் தேயிலை விவசாயிகளின் பொருளாதார நல்வாழ்வு உறுதி செய்யப்பட்டு, நாட்டின் 2030ஆம் ஆண்டுக்கான தேயிலை தொழில்துறை இலக்குகளை அடைய முடியும் என்றார்.



