தமிழகத்தினூடான தாயக தமிழர்களின் அணுகுமுறை : விதுரன்

தாயகத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது வெறுமனே இலங்கைத் தீவின் உள் நாட்டு விவகாரமாகவோ அல்லது ஒரு பிராந்திய எல்லைப் பிரச்சினையாகவோ சுருங்கிவிடக்கூடியதொன்றல்ல.
அது தெற்காசியப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சமநிலை, இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு மற்றும் சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளோடு ஆழமாகப் பிணைக்கப்பட்ட சர்வதேச விவகாரமாகும்.
இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதும், ஏமாற்று அரசியல் சாசன நகர்வுகளை மேற் கொள்வதும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இத்தகையதொரு இக்கட்டான அரசியல் சூழலில், தாயகத்தமிழர் தரப்பு தமிழகத்தை எப்போதும் தனது முதன்மை அரசியல்; தார்மீகக் கோட்டையாக அணுகி வருகின்றது. தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த குறுகிய காலத்துக்குள் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தேறியிருந்த நிலையில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்தித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்த முதலா வது தாயக அரசியல் தரப்பினராக தமிழ்த் தேசியப் பேர வையினரே இருக்கையில் அவர்கள் தாயகத் தமிழர்க ளின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை அவரிடத்தில் வலுவாக வெளிப்படுத்தியுள்ளமையானது விமர்சனங்க ளுக்கு அப்பால் மூலோபாய நகர்வாக உற்றுநோக்கப்படுகி றது.
அரசியல் அறிவியல் கோட்பாடுகளின்படி, ஒற்றை யாட்சி அரசாங்கம் என்பது அதிகாரங்கள் அனைத்தையும் மையப் பாராளுமன்றத்தில் குவித்து வைத்திருக்கும் கட்டமைப்பாகும். அங்கு உருவாக்கப்படும் மாகாண சபைகளோ அல்லது உள்ளுர் அமைப்புகளோ இறைமை அதிகாரமுடைய துணை நிலை அமைப்புகளாக இருக்க முடியாது. அவை வெறும் மத்திய அரசின் நிர்வாகக் கிளை களாக மட்டுமே தொழிற்பட முடியும்.
இலங்கையில் 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டமும் மாகாணசபை முறையும், ஒரு கையால் அதிகாரங்களைக் கொடுப்பது போல் கொடுத்து மறுகையால் பறிக்கும் ஒற்றையாட்சி வஞ்சகமாக அமைந்திருந்த காரணத்தாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கிய அனைத்துத் தரப்பி னராலும் அது அடியோடு நிராகரிக்கப்பட்டது.
தற்போது இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், கடந்த 2015-2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) வரைபை இறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த வரைபானது ஏற்கனவே தமிழர் களால் நிராகரிக்கப்பட்ட 13ஆம் திருத்தத்தை விடவும் பலவீனமானதும், மாகாணங்களின் எஞ்சிய அதிகாரங்களை யும் பறிக்கக் கூடியதுமாகும்.
இதற்கு நேர்மாறாக, சமஷ்டி என்பது மத்திய அரசும் மாநில அரசுகளும் தத்தம் எல்லைகளுக்குள் சமமான அதிகாரத்துடனும் சுயாதீனத்துடனும் இயங்குவதை உறுதி செய்வதாகும்.அந்த அடிப்படையில், தாயகத் தமிழர்கள் கோரும் தமிழர் தேசம், வரலாற்றுத் தாயகம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய அடிப்படைப் பண்புகளை உள்ளடக்கிய ‘திம்புக் கோட்பாடுகள்’ ஒற்றையாட்சிக்குள் சாத்தியப்படாது என்பதைத் தமிழ்த் தேசியப் பேரவை முதல்வர் விஜய்க்கு தெளிவாகக் வெளிப்படுத்தியுள்ளது.
உலக அரசியல் வரலாற்றையும் சர்வதேச தொடர்புகளையும் உற்றுநோக்கினால், ஒடுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்களின் அரசியல் விடுதலையைப் பெறுவதற்குக் ‘கையகப்படுத்தப்பட்ட தாயகம் மற்றும் தொப்புள்கொடி உறவுக் கோட்பாடு’ மிக வலிமையானதொரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காண முடியும்.
சர்வதேச அரசியலில் ‘Kin-State’ என்பது எல்லை யைக் கடந்து வாழும் தங்களின் ஒத்த இனம், மொழி, கலாசாரத்தைக் கொண்ட மக்களின் பாதுகாப்பிற்கும் உரிமைக்கும் தார்மீக ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் குரல் கொடுக்கும் பொறுப்பைக் கொண்ட அண்டை மாநிலத்தையோ அல்லது நாட்டையோ குறிக்கும்.
ஐரோப்பாவில் வடக்கு அயர்லாந்துப் பிரச்சினை யின் போது, அயர்லாந்து குடியரசு பிரித்தானிய அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளும், சர்வதேச அரங்கில் ஆற்றிய இராஜதந்திரப் பங்கும் தமிழ்த் தேசத்தின் விவ காரத்திற்கு நெருக்கமான முன்னுதாரணமாகும்.
கிழக்குத் திமோரின் விமோசனத்தில் அவுஸ்திரே லியா மற்றும் சர்வதேச சமூகத்தின் தலையீடும், பங்களா தேஷ் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பும் இக் கோட்பாட்டின் வரலாற்றுச் சான்றுகளாகும்.
அந்த வகையில், தாயகத்தமிழர்களுக்குத் தமிழகம் என்பது வெறும் உணர்வுப்பூர்வமான நிலப்பரப்பு மட்டுமல்ல அது சர்வதேச அரங்கில் தமக்கான நீதியைப் பெறுவதற்கான ‘அரசியல் ஏவுதளம்’ என்று கூறலாம்.
கடந்த 2026 ஜனவரியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய உத்தி யோகபூர்வமான கடிதத்தில், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டி, 1985 திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்று வலியுறுத்தியமை இந்த ‘Kin-State’ கோட் பாட்டின் மிகச் சிறந்த நடைமுறை வடிவமாகும்.
தமிழக அரசியல் களம் தற்போது புதிய தலைமுறை மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தச் சூழலில், முதல்வர் விஜயுடனான தமிழ்த் தேசியப் பேரவையின் சந்திப்பு, தமிழகத்துடனான அணுகுமுறையில் அடுத்த கட்டப் பரிமாணத்தைத் தொட்டுள்ளது.  தாயகத் தமிழர்களின் விவகாரத்தைத் தமிழகத்தின் உள்நாட்டு அரசியல் விருப்பு வெறுப்புகளுக்குக்கோ அல்லது தேர்தல் இலாப நட்டங்களுக்கோ அப்பாற்பட்ட ஒரு ‘ஒருமித்த நிலைப்பாடாக’(Consensus Policy) மாற்ற வேண்டும் என்ற பேரவையின் கோரிக்கை மூலோபாய நோக்கக் கொண்டது என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிக ளையும் உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது மற்றும் தாயகத்தமிழர் நலன் சார்ந்த அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்துவது ஆகிய நகர்வுகள், தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக வடிவெடுக்குமாயின் அதன் தாக்கம் அபரிமிதமானது.
அத்தகையதொரு ஒருமித்த அரசியல் அழுத்தம், புதுடில்லியில் உள்ள இந்திய மத்திய அரசுக்கு வலுவான ஜனநாயகச் செய்தியைக் கடத்துவதுடன், தயாகத்தில் கட்டமைப்பு சார் இனவழிப்பைத் தொடர்ச்சியாக மேற் கொண்டுவரும் இலங்கை அரசுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கும் ‘தாயகத்தமிழர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல, அவர்களுக்குப் பின்னால் எட்டுக்கோடித் தமிழக மக்கள் எப்போதும் துணையாக நிற்பார்கள்’ என்ற பலமான எச்சரிக்கையைச் சர்வதேசத் தளத்தில் பறைசாற்றும்.
இருப்பினும், இந்த அரசியல் அணுகுமுறையானது வெறும் உணர்ச்சிப் பேச்சுகளோடு கடந்துபோகாமல், இரு தரப்பு உறவுகளில் உள்ள யதார்த்தமான சவால்களைக் கையாள்வதிலேயே அதன் முழுமையான சாத்தியப்பாடு தங்கியுள்ளது. சர்வதேச உறவுகளில் ‘யதார்த்தவாதம்’ என் பது மிக முக்கியமானது. நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. நலன்களே நிரந்தரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இருதரப்புச் சவால்களையும் அணுக வேண்டும்.
இந்திய மற்றும் தாயகத் தமிழ் மீனவர்களின் வாழ் வாதாரப் பிரச்சினை என்பது இரு தரப்புத் தொப்புள்கொடி உறவையும் சிதைப்பதற்காகச் சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டு வரும் நச்சு ஆயுதமாகும்.
இதற்குப் பரஸ்பரப் புரிதலுடனும், கூட்டு நல்வாழ்வு அடிப்படையிலும் நிலையானதொரு தீர்வைக் காண்பதன் மூலமே தமிழகத்தின் ஆதரவை முழுமையாகத் தக்கவைக்க முடியும். அதேபோன்று, தமிழகத்தில் தங்கியுள்ள தாயகத் தமிழ் அகதிகளின் நீண்டகாலக் குடியுரிமை மற்றும் வாழ் வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தமிழக அரசு இந்திய மத்திய அரசுக்கு வழங்கும் அழுத்தங்களிலேயே தங்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் சீனா உள்ளிட்ட இதர சக்திகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புச் சமநிலை அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதும் இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய புறக்காரணிகளில் மிகவும் முக்கியமானதாகும்.
இத்தகைய புவிசார் அரசியல் சூழல்கள் மாறும் போது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தாயகத் தமிழர்களுக்குச் சாதகமாகத் திருப்புவதற்குத் தமிழகத்தின் ஒருமித்த அரசியல் அழுத்தமே முதன்மை உந்துசக்தியாக அமையும்.
அந்த தாயகத் தமிழர்கள் சர்வதேசத் தளத்திலும் பிராந்தியத் தளத்திலும் மேற்கொண்டு வரும் தொடர்ச்சி யான ஜனநாயக, இராஜதந்திர முயற்சிகள் ஒருபோதும் வீண்போகாதிருக்க வேண்டுமாயின் தமிழகத்தின் புதிய அரசியல் தலைமையை தாயகத்தின் தமிழ்த் தேசியப் பேரவை போன்ற துடிப்புள்ள அரசியல் சக்திகளின் தொடர்ச்சியான அணுகல்களே தமிழ் தேசத்துக்கும், தமிழி னத்துக்குமான விமோசனத்திற்கான புதிய வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
தாயக தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய  முதல்வர் விஜயால் முடியுமா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்களை விடுத்து தற்போதைய முயற்சியை  உள்ளக அரசியல் கொம்புசீவல்களுக்கு பயன்படுத்தி னால் வாசல்வரையில் கொண்டுவந்து போட்டுடைத்தகதையா கவே இருக்கும்.