19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்து ஆதிக்கப் படைகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மீது படையெடுத்தபோது திருடப்பட்ட பெனின் வெண்கலச் சிலைகள் உட்பட 18 கலாச்சாரப் பொருட்களை சுவிட் சர்லாந்து நைஜீரியாவிடம் திருப்பிக் கொடுத்துள்ளதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்படைப்பு நிகழ்வு, திங்கள ன்று(29) லாகோஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அங்கு, நைஜீரியாவின் கலாச்சார அமைச்சர் ஹன்னது மூசா முசாவா மற்றும் சுவிஸ் கூட்டாட்சி கவுன்சிலர் எலிசபெத் பாம்-ஷ்னைடர் ஆகியோரும், கலாச்சாரச் சொத்துக்களின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் திருப்பிக் கொடுத்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கலாச் சாரப் பொருட்களைத் திருப் பிக் கொடுப்பதற்கான நடை முறைகளையும், சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான ஒத்து ழைப்பையும் இந்த ஒப்பந்தம் வகுக்கிறது என்று சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
திருப்பிக் கொடுக்கப்பட்ட 18 கலைப்பொருட்க ளில், இரண்டு சூரிச்சில் உள்ள ரீட்பெர்க் அருங் காட்சியகத்திலிருந்தும், இரண்டு ஜெனீவா இனவி யல் அருங்காட்சியகத்திலிருந்தும், 14 சூரிச் பல்கலைக் கழகத்தில் உள்ள இனவியல் அருங்காட்சியகத் திலிருந் தும் வந்தவை என்று நைஜீரியாவின் தேசிய அருங்காட்சி யகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆணையம் (NCMM) கூறியுள்ளது.
“நமது கலாச்சார பாரம்பரியத்தைத் திரும்பப் பெறுவது என்பது கலைப்பொருட்களை மீட்பதை விட மேலானது. அது உரையாடல், நம்பிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியைப் பிரதிபலிக்கிறது,” என்று நைஜீரிய கலாச்சார அமைச்சர் X தளத்தில் எழுதியுள்ளார்.
அந்தப் பொருட்களில் அரச தலைகள், நினைவுப் பலகைகள், முகமூடிகள், மணிகள், செதுக்கப்பட்ட யானைத் தந்தங்கள், ஒரு குதிரை வீரன் உருவம், ஒரு நினைவு வெண்கலத் தலை மற்றும் அரச மூதாதையர் ஆலயங்களிலிருந்து பெறப்பட்ட 18 ஆம் நூற்றாண் டின் தந்தம் ஆகியவை அடங்கும். தற்போதைய நைஜீரியாவில் உள்ள பெனின் இராச்சியத்தின் அரச அரண்மனையிலிருந்து 1897 ஆம் ஆண்டில் பிரித்தானிய துருப்புக்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக் கான கலாச்சார மற்றும் சடங்கு கலைப்பொருட்களில் இவையும் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



