இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் பசறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நமுனுகுல, கனவரல்ல தோட்டப் பகுதியில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் திங்கட்கிழமை (06) நாட்டப்பட்டது.
“வளமான நாடு – அழகிய வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், இந்திய அரசின் நிதியுதவியுடனும் இலங்கை அரசின் அனுசரணையுடனும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளைக் கொண்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இப்பதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் துணை உயர்ஸ்தானிகர் ஹர்விந்தர் சங் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம், பதுளை மாவட்டத்தின் கனவரல்ல பகுதியில் மண்சரிவு அபாயத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த 57 குடும்பங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்திய அரசினால் ரூ. 28 இலட்சம் நிதியுதவி வழங்கப்படுவதுடன், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இலங்கை அரசினால் ரூ. 4 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான, சுபீட்சமான மற்றும் நிலையான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்நிகழ்வில் இந்திய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்னன் செல்வராஜ், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகம, பசறை பிரதேச செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.



