இலங்கையில் நாளாந்தம் 30 பேர் பலி – சுகாதார அமைச்சு தகவல்!

இலங்கையில் பல்வேறு விபத்துகள் காரணமாக நாளாந்தம் சுமார் 30 மனித உயிர்கள் பலியாவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த, சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் சமூக மருத்துவ விசேட நிபுணர் வைத்தியர் சமித்த சிறித்துங்க இந்த விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஒவ்வொரு 3 மணித்தியாலங்களிலும் சராசரியாக 4 பேர் வீதம் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இலங்கையில் விபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் 8,000 முதல் 10,000 வரையிலான மரணங்கள் பதிவாகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 30 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.

பொதுவாக விபத்துகள் என்று கூறும்போது அனைவரும் வீதி விபத்துகளை மட்டுமே பிரதானமாகப் பேசுகின்றனர்.

எனினும், வீதி விபத்துகளைத் தவிர சமூகத்தில் அதிகம் பேசப்படாத பல விபத்துகளால் பெருமளவிலான உயிர்கள் பலியாகின்றன.

அதிகாரிகள் கவனம் செலுத்தத் தவறிய அல்லது பொதுமக்கள் மறந்துவிட்ட மரணங்களுக்கான காரணங்களாக உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், நீரில் மூழ்கி மரணித்தல், மின்சாரத் தாக்குதலுக்குள்ளாதல் மற்றும் விஷப்பாம்புக்கடிக்கு இலக்காகுதல் என்பவற்றையும் குறிப்பிடலாம்.

இந்த அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கியே நாளாந்த விபத்து மரணங்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

தடுக்கக்கூடிய காரணங்களினாலேயே மக்கள் தங்களின் பெறுமதிமிக்க உயிர்களை இழந்து வருவதாகவும், இது ஒரு பெரும் சமூகப் பேரழிவு என்றும் அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.