தாய்க்கட்சி என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் கடந்த 31.05.2025ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது அந்த கூட்டத்தின் பின்னர்
நிர்வாக செயலாளரும் மூத்த உறுப்பினருமான திரு குலநாயகம் சகல மத்திய குழு உறுப்பினர்களுக்கும் கடந்த 02.06.2025 ஒருகடிதம் அனுப்பியிருந்தார், அந்த கடிதத்தில் தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வர லாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக் கப்படுகின்றன.
ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற கட்சியானது அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது. கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்க ளும் குடிகொண்டு சங்கடம் கொடுக்கும் நிலை உள்ளது அதற்கு கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது, கட்சியுடனான எனது 62 ஆண்டுகாலச் செயற்பாடுகளை எண்ணிப் பார்க்கிறேன்.
வழிப்போக்கனாக இருந்துவிட்டு பதவி பெறுவதற்காக கட்சியில் சேர்ந்து இலாபம் அல்லது ஏதும் உதவி பெற்றவன் அல்ல நான். இலங்கைத் தமிழரசுக்கட்சி மீது இருக்கும் பேரார்வத்தாலேயே இக் கடிதத்தினை எழுதுகிறேன். இதனை மத்திய செயற்குழுவில் ஆய்வு செய்து தகுந்த தீர்வைக் காணவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கடந்த தலைமைச் செயலகத்தில் 31.05.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்ற தலைவர் தெரிவு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். என தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சேவியர் திரு குலநாயகம் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
நிர்வாக செயலாளர் குலநாயகம் இவ்வாறு எழுதிய கடிதம் தொடர்பாக இலங்கைத்தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரனால் பதில் கடிதம் ஒன்று ஊடகங்களில் வெளிவந்தது. அந்த கடிதத்தில் அனைத்துத் தெரிவுகளும் முடிந்த பின்னர், உடுப்பிட்டிக் கிளைத் தலைவர் எழுந்து, திரு. குலநாயகம் ஒரு பதவிக்கும் தெரிவாகவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய போது, உடுப்பிட்டித் தொகுதியில் இருந்து நியமிக்கப்பட்ட உறுப்பினர் தான் இராஜினாமா செய்ய முன் வந்தார். ஆனால் திரு. குலநாயகம் அதை நிராகரித்து விட்டார். இதுவே கூட்டத்தில் நடந்தது. இந்த விடயங்களை திரு. குலநாயகம் அவர்களே பதிவும் செய்தார். கூட்ட நடவடிக்கையில் எவ்விதமான முறைகேடான விடயமும் நடைபெறவில்லை. திரு. குலநாயகமோ வேறு எவருமோ இறுதியில் எந்த ஆட்சேபனையையும் எழுப்ப வில்லை. என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இருவருடைய கடிதங்களுக்கு அப்பால் மேலதிகமாக யாழ் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் கடந்த 13.06.2026ல் தமிழரசுக்கட்சி விட்ட தவறுகளை சுட்டிக்காட்டி விரிவான கடிதம் ஒன்றை மத்தியகுழுவுக்கு முறையிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக்கிளை மற்றும் தொகுதிக்கிளைகளுக் கான புதிய நிர்வாகத் தெரிவுகள், கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணான வகையிலும் முறைகேடான முறையிலும் நடத்தப்பட்டுள்ளதாக நான்கு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார், அந்த நான்கு முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு
1. காங்கேசன்துறை தொகுதி நிர்வாகத் தெரிவில் முறைகேடு: கடந்த 2025 அக்டோபர் 21 அன்று, காங்கேசன்துறைத் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளருக்குத் தெரியாமலும், ஏற்கனவே இயங்கி வரும் தொகுதி நிர்வாகத்திற்கு அறிவிக்காமலும், கட்சி யின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டு இந்தத் தெரிவு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொகுதி நிர்வாகிகள் ஏற்கனவே கட்சியிடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளனர்.
2. வட்டுக்கோட்டைத் தொகுதி தெரிவில் யாப்பு மீறல்: கடந்த 2026 ஏப்ரல் 23 அன்று, வட்டுக்கோட்டைத் தொகுதியில் ‘வெற்றிடம் நிரப்புதல்’ என்ற பெயரில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது. இதன்போதும் மாவட்டத் தலைவருக்கும், செயலாளருக்கும் அறிவிக்கப்படாமல்பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதேச சபை உறுப்பினர்களைக் கொண்டும், காரைநகர் பிரதேசத்தையும் இணைத்தும் நடத்தப்பட்ட இந்தத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணானது என ஊடகங்களில் செய்திகள் வெளியானதோடு, தொகுதி உறுப்பினர்களும் கட்சி நிர்வாகத்தினரும் முறையிட்டுள்ளனர்.
3. யாழ் மாவட்ட கிளையின் அராஜகமான அதிகார துஷ்பிரயோகம்: கடந்த 2026 மே 31 அன்று, யாழ் மாவட்ட கிளை உத்தியோகத்தர் தெரிவுக் கூட்டத்தில் நடைபெற்றுள்ளது. மாவட்டத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரே இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கியிருந்தார். இதன்போது, புதிய நிர்வாகத் தெரிவு குறித்து உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் கோரியும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “தலைமைப் பீடத்தில் (Table) இருந்து தெரிவு செய்யப்பட்டால், அதற்கு எதிராக மறு தெரிவு கோரக் கூடாது” என மிரட்டும் தொனியில் பதில் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சியில் அங்கத்தவர்களின் கருத்துக்களைக் கேளாது நடத்தப்பட்ட இந்த அராஜகமான, ஜனநாயக விரோதச் செயல், ஜனநாயகத்திற்குச் சாவுமணி அடிப்பது போல் அமைந்துள்ளதாக கடிதத்தில் சாடப்பட்டுள்ளது.
4. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முன்னெடுக்கப்பட்ட தெரிவு: கடந்த தலைவர் தேர்தலின் போது, ‘தொகுதி’ என்பது ‘பிரதேச ரீதியானது’ என மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டு, வலிகாமம் தென்மேற்கு மற்றும் வலிகாமம் தெற்கு என இரு பிரதேச பிரிவுகளாக பொதுச்சபைக்கு தலா 5 பேர் வீதம் (மொத்தம் 10 பேர்) தெரிவு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிர்வாக நடைமுறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், நீதிமன்ற வழக்கை மதிக்காமல், ஏற்கனவே பிரதேச பிரிவாக இருந்த நிர்வாக முறையை தற்போது மீண்டும் ‘தொகுதி’ என ஒன்றாக இணைத்துத் தெரிவு செய்தமை எந்த அடிப்படையில்? யாருடைய தீர்மானம்? என்ற கேள்விகளை யும் அவர் எழுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாடுகள் தற்போது யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளைகள், மற்றும் மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு முறைகேடாக யாப்புக்கு முரணாக இடம்பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணி தலைவர் கந்தசாமி பிருந்தாபன் மத்திய குழு உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை தொடர்பாக எப்போது மத்தியகுழு கூடுவது என்ன முடிவு எடுப்படும் என்பது ஒருபுறம் இருக்க, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொடர்பாக மீண்டும் அதன் பதில் பொதுச்செயலாளர் கடந்த 2026, யூன், 15, ல் ஊடகசந்திப்பில் பாராளுமன்ற குழுவில் இருந்து யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அரசியல்குழுவிலிருந்து நீக்கியதை நியாயப்படுத்தி நான்கு காரணங்களைக்குறிப்பிட்டிருந்தா ர்.
சட்டமா அதிபர் நியமனம் , புனரமைப்பு நியமனம் என்பவற்றில் தவறானவர்களுக்கு ஆதரவளித்தாக காரணம் கூறியிருந்தார், குறிப்பாக இராணுவ அதிகாரியை நியமிக்க ஆதரவளித்தார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதனால் அவரை நீக்கி சாணக்கியனை நியமித் ததாகக்கூறியிருந்தார். ஆனால் சாணக்கியனை விட மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டக்களப்பு ஶ்ரீநேசன், அம்பாறை கோடீஷ்வரன் ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஏன் சாணக்கியனை நியமித்தார் என்பதை அவர் சொல்லவில்லை அதற்கான காரணம் தமது அணியை சேர்ந்தவர் என்பதாலும், ஶ்ரீநேசன், கோடீஷ்வரன் சிறிதரன் அணியை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை செய்யவில்லை என்பதே அவரால் கூறப்படாத உண்மை.
தந்தை செல்வாவால் 1949, டிசம்பர்,18, ல் ஆரம்பித்த தாய்க்கட்சி என கூறப்படும் இலங்கை தமிழரசுக்கட்சி கடந்த 2024, ஜனவரி,21, ல் இருந்து இன்றுவரையும் ஏறக்கு றைய இரண்டரை வருடங்களாக இரண்டு அணியாக செயற் படுவதே தொடர் முரண்பாடுகளுக்கு காரணமாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நீண்டகாலமாக நிலவிவரும் உட்கட்சி முரண்பாடுகள், தத்துவார்த்த வேறு பாடுகள், தலைமைப் பதவிக்கான போட்டிகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.
முக்கிய முரண்பாடுகள் மற்றும் பிளவுகளுக்கான அடித்தளமாக அமைந்தது கடந்த 2024,ஜனவரி,21, ல் இடம் பெற்ற ஜனநாயக ரீதியிலான வாக்கெடுப்பு மூலமான கட்சித் தலைவர் தேர்தலிலேயாகும்.
வாக்கெடுப்பில் 184 வாக்குகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்ற னர். சி. சிறீதரனை எதிர்த்துப் போட்டியிட்ட எம்.ஏ. சுமந்திரன் தோல்வியுற்று சிறிதரன் 47, மேலதிக வாக்குகளால் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூன்றாவது வேட்பாளரான மட்டக்களப்பு சீனித் தம்பி யோகேஸ்வரன் சிறிதரனை ஆதரித்தமையால் அவரின் வாக்கு உட்பட எந்த ஒரு வாக்கையும் யோகேஸ் வரன் பெறவில்லை என்பது ஒரு தேர்தலில் தனது வாக்கை இன்னொருவருக்கு செலுத்திய வேட்பாளர் என்ற சரித்திரம் இந்த தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு தேர்தலில் யோகேஸ்வரன் பெற்றுள்ளார்.
தமிழரசுக்கட்சி ஆரம்பித்த 1949,டிசம்பர்,18, தொடக்கம் 2024, ஜனவரி,21, வரை 75, வருட வரலாற்றில் 16, தடவை கட்சி மாநாடுகளும், தலைவர் தெரிவுகளும் இடம்பெற்றன. இவ்வாறு வாக்கெடுப்பு மூலம் எந்த ஒரு தலைவர் பதவியும் தெரிவு செய்யப்படவில்லை. ஒற்றுமையாக பேசி சமாதானமாகவே சகல கட்சி பதவிகளும், 75 வருடங்களாக தெரிவான கட்சியானது 2024, ஜனவரி,21, ல் வாக்கெடுப்பு கலாசாரம் அரசியல் கட்சியில் நடந்தமையால் தற்போது இரண்டு வருடங்கள் ஐந்து மாதங்களாக இரண்டு குழுவாக சிதறி தமிழரசுக்கட்சி பதவிக்காக அடிபிடி படும் கட்சி என்ற பெயரை பெற்றுள்ளது.
2024, ஜனவரி,21, ல் ஏற்பட்ட தலைவர் வாக்கெடுப்பின் எதிரொலி 2024,ஐனவரி,27, ல் திருகோணமலையில் இடம் பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் ஏனைய பொதுச்செயலாளர் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவில் ஏற் பட்ட முரண்பாடுகள், குழப்ப நிலைமை அதனை சீர் செய்ய முடியாத கட்சிதலைமை விட்ட தவறானது பதவி ஆசைக்காக திருகோணமலை நீதிமன்றில் 2024, பெப்ரவரி திருகோணமலை சாம்பல்தீவைச்சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவரால் வழக்கு தாக்கல்செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணே சராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மாநாட்டை நடத்துவதற்கு நீதி மன்றம் தடை யுத்தரவு பிறப்பித்தது.
அந்த வழக்கு விசாரணை 2024, பெப்ரவரி, 29, தொடக்கம் 2026, யூன்,20, வரை ஏறக்குறைய இரண்டு வரு டங்களாக பல தவணையிடப்பட்டு முடிவின்றி தொடர்வதால் நிரந்தர தலைவரோ, நிரந்தர பொதுச்செயலாளரோ இன்றி தற்காலிக தலைவராக சி. வி.கே. சிவஞானமும், தற்காலிக பொதுச்செயலாளராக எம்.ஏ. சுமந்திரனும் , பாராளுமன்ற குழு தலைவர் பதவியும் தற்காலிகமாக சாணக்கியனும் தற்காலிக பதவிகளுடன் கட்சி தற்போது ஒற்றுமை இன்றி முரண்பாடுகளுடன் தொடர்கிறது.
இந்த முரண்பாடுகளுடன் கட்சி தொடர்வதால் வடகிழக்கு தமிழ் மக்கள் ஒட்டு மொத்த தமிழ்தேசிய கட்சிகள் மீதும் வெறுப்படைந்துள்ளனர்.
போதாக்குறைக்கு தமிழரசுக்கட்சிதான் இரண்டு அணி என பார்த்தால் அதே பாணியில் தற்போது ரெலொ கட்சியும் இரண்டு அணியாக கடந்த 2026, யூன்,14, ல் வவுனி யாவில் நடந்த ரெலோ மாநாடு உறுதிப்படுத்தியுள்ளது. செல்வம் அணி, வினோ அணி என ரெலோவும் இரண்டாக பிழவு பட்டுள்ளது.
தாய்க்கட்சி என அழைக்கப்படும் தமிழரசுக்கட்சி தற்காலிக பதவிகளுடன் இரண்டரை வருடமாக இயங்கும் நிலையில் ஒற்றுமை இன்றி முரண்பாடே தொடர்கிறது. இது ஏனைய கட்சிகளுக்கும் வாய்ப்பாக மாறிவிட்டது.



