இலங்கைக்கான ஜேர்மன் நாட்டின் பிரதித் தூதுவர் Sarah Sharief, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனை இன்று புதன்கிழமை (24) மாநகர சபையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் விசேட ஏற்பாட்டில் அமைந்த இச்சந்திப்பின்போது, மட்டக்களப்பு மாநகர சபைக்கும் ஜேர்மனியின் முனிச் (Munich) நகர சபைக்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு நல்லுறவு, தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால கூட்டுத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், ஜேர்மன் பிரதி தூதுவருடனான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான புதிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதி தூதுவருடன் விரிவாக ஆராயப்பட்டது.
அத்தோடு, மட்டக்களப்பு நகரில் வாழும் பல்லின மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மற்றும் அவர்கள் தமக்கிடையே பேணிவரும் சுமுகமான, இணைந்து வாழும் பண்புகள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஜேர்மன் அரசும், அந்நாட்டு மக்களும் வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக முதல்வர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
குறிப்பாக, 2005ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் ஜேர்மனியின் முனிச் நகர சபைக்கும் இடையில் செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் வெற்றிகரமாகச் செய்து கொடுக்கப்பட்டமை நன்றியோடு நினைவுகூரப்பட்டது.
இரு நகரங்களுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை வெளிப்படுத்தும் நோக்கில், கல்லடி பாலத்துக்கு அருகில் ‘முனிச் பிரண்ட்ஷிப் ரோடு’ எனப் பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை நாட்டப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு, அந்த காலகட்டத்தில் முனிச் நகர சபையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் சொகுசு வாகனம் (Luxury vehicle) மூலம் மட்டக்களப்பு மக்கள் பெற்ற நன்மைகள் குறித்து இருதரப்பும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டன.
முன்னர் மாநகர சபை ஊழியர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஜேர்மனியில் விசேட பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அதேபோன்றதொரு பயிற்சியை தற்போதைய ஊழியர்கள் மற்றும் சபை உறுப்பினர்களின் திறனாற்றலை மேம்படுத்தும் பொருட்டு மீண்டும் நடத்துவதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு பிரதி தூதுவரிடம் வழங்கப்பட்டது.
மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் தரப்பிலிருந்து நேரடி நிதி உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறித்து இங்கு விபரிக்கப்பட்டது.
குறிப்பாக, ஊழியர்களின் 60 சதவீத (60%) சம்பளத்தை மாநகர சபையின் சொந்த வருவாயிலிருந்தே வழங்கவேண்டியுள்ளதால், நகரின் ஏனைய அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதில் பெரும் நிதி நெருக்கடி நிலவுவதாக எடுத்துரைக்கப்பட்டது.



