காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை : கடற்றொழில் அமைச்சர் கருத்து

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணியாளர்கள் மிகவும் சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக பாராட்டிய அமைச்சர், காணாமல் போனவர்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல என்றும், அவர்களது குடும்பங்கள் நீண்டகால மனவேதனையுடனும் எதிர்பார்ப்புடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 2,452 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பதிவு செய்யப்படாத பல சம்பவங்களும் இருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தில் இருவர் அல்லது மூவர் வரை காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இழந்து துயரத்தில் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

“உடல் காயங்களுக்கு மருந்து வழங்க முடியும். ஆனால் மனக் காயங்களுக்கு உண்மையான மருந்து அன்பும் நீதியும் மட்டுமே.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது வேதனையை பணத்தால் ஈடுசெய்ய முடியாது” என்றும் கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன், தென் இலங்கையிலும் 1987–1989 காலப்பகுதியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டதாக நினைவூட்டிய அவர், வடக்கும் தெற்கும் ஒரே விதமான துயரத்தை பகிர்ந்து கொள்கின்றன என்று தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கும் இந்த மனவேதனைக்கு உரிய தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் மக்கள் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மையுடன் வாழ்ந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதுடன், மீள்குடியேறிய மக்களுக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.

அதேநேரம் இன வேறுபாடுகளைத் கடந்து அனைவரும் ஒரே நாட்டின் மக்களாக வாழக்கூடிய உண்மையான நல்லிணக்கச் சமூகத்தை உருவாக்குவதே இலக்காக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.