உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல் பின்னணியைக் கொண்ட ஒரு குழுவினர் திட்டமிட்ட முறையில் மறைமுகமாகத் தலையிட்டு, முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்போது நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள், சந்தேகநபரான சுரேஷ் சலே விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும், இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் செயல்களுக்கு உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்டவர்கள் ஆதரவளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, இதுவரை வெளிவராத அரசியல் பின்னணிகள் மற்றும் தொடர்புகள் அம்பலமாவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



