தமிழர் இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வை இலக்காகக்கொண்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற் உறுதியளித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது நாட்டின் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக முன்னேற்றம் என்பவற்றுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக சுவிட்ஸர்லாந்து தூதுவருக்கு சிறிதரன் நன்றி தெரிவித்ததுடன், நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி கௌரவித்தார்.
அதேபோன்று தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கான நிலையான அரசியல் தீர்வை எட்டும் நோக்கில் தூதுவர் சிரி வோல்ற் அவரது பதவிக்காலத்தில் முன்னெடுத்த சமாதான மற்றும் நல்லிணக்க முயற்சிகளை சிறிதரன் நினைவுகூர்ந்தார்.
அதற்குப் பதிலளித்த தூதுவர், இலங்கையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னரும், உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் தமிழர் இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வை இலக்காகக்கொண்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்குவதாக உறுதியளித்தார்.



